உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கண்டறிந்து, மக்களுக்கு செலுத்தியதன் பயனாக, தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.
எனினும், கொரோனாவை முழுமையாக விரட்டும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள, கோவிட்டுக்கு எதிரான நாசி வழிச் செலுத்தும் தடுப்பு மருந்துக்கு, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது. இது கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தருகிறது” என்று கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில், கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையின் க்ளென்மார்க் எனும் நிறுவனம் SaNOtise நிறுவனத்துடன் இணைந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாசி ஸ்ப்ரே (fabispray) ஒன்றை கண்டுபிடித்து, அதற்கான அனுமதியை இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வாங்கியது.
நைட்ரிக் ஆக்சைட் கலந்த இந்த நாசி ஸ்பிரேயை உற்பத்தி செய்யவும், விற்கவும் இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. “இந்த மருந்தை பயன்படுத்தியதன் விளைவாக, ஃபேஸ்-3 கட்டத்தில் வயதானோர்களுக்கு பயன்படுத்தியபோது 24 மணிநேரத்தில் 94%, 48 மணிநேரத்தில் 99% என குணமாகுவோரின் சதவிகிதம் கூடியது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, உலக நாடுகளின் தடுப்பூசி வளர்ச்சி கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மேலும் ஊக்கத்தை தருகிறது. ஒமிக்ரோன் மற்றும் இந்த தொற்றின் அறிகுறி உடையோருக்கு இரண்டாவதாக ’பைவேலன்ட் (Bivalent)’ எனும் பூஸ்டர் தடுப்பூசியை பயன்படுத்த, இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்றும் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.