சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி சென்னை கல்லூரி மாணவி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி: சினிமா ஆசை காட்டி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சென்னை கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டம் நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (35). சினிமா தயாரிப்பாளர். இவர், கடந்த 2019ல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி,  புதிய படம் எடுப்பதாகவும், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.  இதை பார்த்த, கோவை அருகே தனியார் கல்லூரியில் ‘விஸ்வல் கம்யூனிகேஷன்’  பட்டப்படிப்பு படித்த சென்னையை சேர்ந்த மாணவி, பார்த்தீபனின் இண்டர்வியூவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தனக்கு நடிகையாக ஆசை உள்ளது. டைரக்டர் ஆகவும் விருப்பம் உள்ளது எனக்கூறியுள்ளார்.

இதை பயன்படுத்திய பார்த்தீபன், ‘உங்களை முதலில் குறும்படத்தில் நாயகியாக நடிப்பை ஆரம்பித்து, பின் சினிமாவில் கதாநாயகியாக்குவது  எனது பொறுப்பு’ எனக்கூறியுள்ளார். பின்னர் பார்த்தீபன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்ததும் அந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார். இது பற்றி போலீசில் புகார் செய்வேன் எனக்கூறியுள்ளார். பார்த்தீபன் அந்த மாணவியை தடுத்து நிறுத்தி,  ‘‘உனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவது எனது பொறுப்பு. உனக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை. தற்போது 17 வயதுதான் ஆகிறது. அதனால், ஒரு வருடம் காத்திரு. நானே உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். இது பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்’’ என கூறியுள்ளார். இதனால் மாணவி, போலீசில் புகார் செய்யும் முயற்சியை கைவிட்டார்.

இதன்பின்னர் இருவரும் அடிக்கடி பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் வெவ்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அப்போது அந்த மாணவியை தயாரிப்பாளர் பார்த்தீபன், பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் அவரை தயாரிப்பாளர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையில், தயாரிப்பாளர் பார்த்தீபன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தகவலறிந்து அந்த மாணவி, பார்த்தீபனை சந்தித்து, ‘‘என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே…?’’ என முறையிட்டுள்ளார். ஆனால், அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இத்தனை நாள் காத்திருந்தும், தன்னை ஏமாற்றி விட்டாரே என மனம் உடைந்த அந்த மாணவி, இது பற்றி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

புகார் மனுவின் விவரம் வருமாறு: எனக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில், டி.என்.41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க அழகான பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என இருந்தது. இதையடுத்து, நான் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டேன். அதில், பேசிய நபர், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தேர்வு நடப்பதாக கூறினார். இதையடுத்து, அந்த விடுதிக்கு சென்றேன். அங்கு பார்த்தீபன் இருந்தார். அவர், தன்னை சினிமா தயாரிப்பாளர் என அறிமுகம் செய்துகொண்டு என்னிடம் பேசினார். அங்கு, என்னைப்போலவே பல பெண்கள் இருந்தனர். அவர் ஒவ்வொரு பெண்ணாக அறைக்கு அழைத்து இண்டர்வியூ நடத்தினார்.

எல்லா பெண்களும் சென்றபிறகு என்னை கடைசியாக அழைத்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். எனது குடும்ப சூழல் பற்றி கேட்டார். பின்னர், குளிர்பானம் குடியுங்கள் என கொடுத்தார். நானும், நம்பி குடித்தேன். சில நிமிடங்களில் மயங்கிவிட்டேன். பிறகு, என்ன நடந்தது என தெரியவில்லை. மயக்கம் தெளிந்து பார்த்தபோதுதான், அய்யோ… மோசம் போய்விட்டோமே… என கதறினேன். அவர், என்னை சமாதானம் செய்து, வயதை காரணம் காட்டி, திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார். நானும், நம்பினேன். இதை பயன்படுத்தி, என்னை பல இடங்களுக்கு பல முறை அழைத்து சென்றார். பல நேரங்களில் என்னை பலாத்காரம் செய்தார். சில மாத்திரைகள் வாங்கி கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்தார்.

நான், திருமணம் செய்துகொள்ளும்படி அக்கடி வற்புறுத்தினேன். இதனால், அவர் என்னுடன் பேசுவதையும், சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டார். தற்போது, என்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இதுதொடர்பாக பார்த்தீபன் மீது, சிறுமி என தெரிந்தும், சினிமா ஆசை காட்டி, பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்திய தண்டனை சட்டம் 312, 294 பி ஆகிய பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பார்த்தீபன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.