திண்டுக்கல்லில் ரூ.18 கோடியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில் ரூ.17.84 கோடியில் 321 வீடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு ஆக.27-ம் தேதி சட்டப்பேரவையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ‘கடந்த சில ஆண்டுகளாக முறையான அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதி செய்யும். இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும்’ என்று அந்த அறிவிப்பில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து, 321 வீடுகளுடன் கூடிய புதிய முகாமை அமைக்க ஏதுவாக தோட்டனூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

இதைத் தொடர்ந்து தோட்டனூத்து ஊராட்சியில் புதிதாக ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடியே 88 லட்சத்து95 ஆயிரம் செலவில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா ரூ.300 சதுரஅடிபரப்பில் மொத்தம் 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முகாமில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 43 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம், தார் சாலை, சிமென்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, புதிய மின்கம்பங்கள், 78 தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ரூ.33 லட்சத்து 10 ஆயிரம் செலவில் ஆண்கள், பெண்களுக்கான குளியலறைகள், ஆழ்குழாய் கிணறு ஆகியன அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலியில் இந்த 321 வீடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை திறந்து வைத் தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல்லில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோரும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலர் டி.ஜெகன்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.