நீலகிரி மாவட்டத்தில் 16 செக்போஸ்ட் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க என்எஸ்டி சிறப்பு குழு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய என்எஸ்டி., சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு 16 எல்லையோர சோதனை சாவடிகளில் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளன. நீலகிரி மாவட்டம் கேரளாவை ஒட்டி அமைந்துள்ளதால் நீலகிரிக்குள் நுழையாத வகையில் தமிழக அதிரடி படையினர் மற்றும் தலா 13 காவலர்கள் அடங்கிய ஒமேகா-1 மற்றும் ஒமேகா- 2 என 2 என்எஸ்டி., எனப்படும் நக்சல் தடுப்பு குழுக்கள் வனப்பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன சோதனை  மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி 11 சோதனை சாவடிகளும், மாவட்ட எல்லைகளில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை உள்ளிட்ட 5 சோதனை சாவடிகள் என மொத்தம் 16 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலைய காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருந்ததால், போதை பொருள் கடத்தல் தொடர்பாக கண்காணிப்பு மேற்கொள்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும் சமீபகாலமாக கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது அதிகரித்தது.

சோதனை சாவடியில் உள்ள போலீசார் வாகன சோதனை நடத்தி புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்கின்றனர். இருப்பினும், முழுமையாக கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 10 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 36 காவலர்கள் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் நியமிக்கப்பட்டு போதை பொருட்கள் கடத்தல் தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்திற்குள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் நுழைவது மற்றும் நீலகிரி வழியாக பிற மாநிலங்களுக்கு கடத்துவது குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து என்எஸ்டி., பிரிவு கூடுதல் எஸ்பி., மோகன் நவாஸ் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாத படி என்எஸ்டி., குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை. இரு என்எஸ்டி., குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் உள்ளூர் காவல்துறையினர் பணியாற்றி வந்த நிலையில், பணி சுமை காரணமாக போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

இதனை களையும் நோக்கில் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக என்எஸ்டி., ஒமேகா-3 என்ற குழு உருவாக்கப்பட்டு சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் ேசாதனை சாவடிகளில் முழு நேர பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், மனவலிமை அதிகரிப்பு, வாகன சோதனையில் உள்ள நுணுக்கங்கள், இடர்பாடான சூழ்நிலையை எதிர்கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மாவோயிஸ்ட் தேடுதல் பணிக்கும் இக்குழுவினர் பயன்படுத்தப்படுவார்கள். கடந்த 1.4.21 முதல் 12.9.21 வரையிலான காலகட்டத்தில் சோதனை சாவடிகளில் உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதில் 39 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் 2 வாகனங்கள், 11 கிலோ கஞ்சா மற்றும் 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், என்எஸ்டி., குழுவினர் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட 1.4.22 முதல் 12.9.22 வரையிலான கால கட்டத்தில் 125 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 வாகனங்கள், 15 கிலோ கஞ்சா மற்றும் 4033 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் அறிவித்துள்ள போதையில்லாத தமிழகம் என்ற திட்டத்தை கருத்தில் கொண்டும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.