`படையப்பா'வில் நான் ஜெயலலிதாவா?! – ரம்யா கிருஷ்ணன் #AppExclusive

`படையப்பா’வில் ரஜினிக்கு அடுத்தபடியாகத் தன் காரெக்டர்தான் அதிகம் பேசப்படுகிறது என்கிற எந்தக் கர்வமுமின்றி ரொம்ப சாதாரணமாகக் காட்சியளித்தார் ரம்யாகிருஷ்ணன். எளிமையான குர்தா, பாண்ட்டில் இருந்தார்.

காதில், கழுத்தில் எதுவும் அணிந்து இருக்கவில்லை. கைவிரல்களில் மட்டும் தாமரைக்கனியை நினைவுபடுத்தும் பெரிய சைஸ் மோதிரம். மோதிரத்தில் ஷீரடி சாய்பாபா (“நான் பாபா பக்தை”)! காலில் கொலுசு அணியும் இடத்தில் ஒரு கறுப்புக் கயிறு! அதேபோல, வலதுகரத்திலும் ஒரு ரட்சை (“எல்லாமே கண் திருஷ்டிக்காக அம்மா கட்டினது… எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு” என்று வெட்கமாகச் சிரிக்கிறார்).

ரம்யாவின் முன்னிரண்டு பற்களில் ஒரு பல் இன்னொன்றின்மீது ஏறத்துடித்த தருணத்தில் பிரம்மா `ஹோல்டான்’ சொல்லியிருப்பார் போலும்! இருந்தாலும், சிரிப்பின் வசீகரத்துக்குக் குறைவில்லை.

Ramyakrishnan

‘படையப்பா’வுல உங்க காரெக்டர் ஜெயலலிதா சாயல்ல வடிவமைக்கப்பட்டிருக்குன்னு ஊர் முழுக்கப் பேச்சிருக்கு. இதுபத்தி..?

ஐயோ… `படையப்பா’வுல நான் ஜெயலலிதாவா..? அவங்க எங்கே இங்க வந்தாங்க? இது ஒரு காதல் கதைங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை!

இருந்தாலும்… அந்த காரெக்டர் ஜெயலலிதாவை அப்படியே இமிடேட் பண்ற மாதிரி இருப்பதா சொல்றாங்களே..?

கடவுளே!

இப்படியெல்லாம்கூடவா பார்க்கறாங்க..? இதே கதையில வேற ஒரு ஹீரோ நடிச்சிருந்தா இப்படிக் கேப்பீங்களா..? ரஜினி சார் படம்னதும் ஏன்… எதையெதையோ `லிங்க்’ பண்ணிப் பார்க்கணும்? படத்துல நீலாம்பரிங்கற அந்த காரெக்டர் வழக்கமான ஹீரோயின்கள் மாதிரி இல்லாம, ரொம்ப வித்தியாசமான ஒரு காரெக்டருங்க… வாழ்க்கையில யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்காதவ… அவ ஹீரோவை லவ் பண்ணும்போது தோல்வி அடையறா… அந்தத் தோல்வியை அவளால ஏத்துக்க முடியலை… அவளோட பிடிவாத குணம், அவளை எந்த எல்லைக்கும் விரட்டத் துடிக்குது. கடைசியில இவ கதை முடிஞ்சு போகுது. அவ்ளோதான். இதுல என் காரெக்டர் ஜெயலலிதானு சொல்றதெல்லாம் அவங்கவங்க நினைப்புதானே தவிர, படத்தோட நோக்கம் அது இல்லை… அதை மீறி அப்படிப் பேசறவங்களைப் பத்தி எனக்குக் கவலையும் இல்லை.

அப்போ வில்லித்தனமான இந்த ரோல்ல நடிக்க எப்படி ஒப்புக்கிட்டீங்க..?

இதை முதல்ல வில்லித்தனம்னே என்னால ஒப்புக்க முடியாது. இது `லவ்’ங்க. அவளோட வெறித்தனமான, கண்மூடித்தனமான லவ். அது கைகூடாதபோது அவ மத்த பெண்கள் மாதிரி மூலையில ஒதுங்கி நின்னு முக்காடு போட்டுக்கிட்டு அழலே… அல்லது மனசுக்குள்ள மறுகி, அடுத்த கல்யாணத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கவும் இல்லே… அவ தன் காதலுக்காகக் கடைசி வரைக்கும் போராடறா… சாகப்போற தருணத்துலகூட தன் முடிவை அவதான் எடுக்கறா. அப்பவும் அது ஹீரோவுக்கு எதிராதான் அமையுது. ஸோ, அவள் செத்தாலும் அந்தப் போராட்டம் வீரத்தனம்தானே தவிர, வில்லித்தனம் இல்லை. நான் நினைக்கறேன்… அடங்கி ஒடுங்கிப்போகும் சமத்துப் பெண்களையே சினிமாவில் பார்க்கிறவங்களுக்கு இந்த மாதிரி மனவலிமைமிக்க உறுதியான பெண்களைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்குன்னு… இன்னும் சொல்லப் போனா, மக்களோட இந்த பிரமிப்புதான் அந்த காரெக்டரோட வெற்றி! படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்னா பொம்பளைப்பா அவ?! இப்படிக் கூடவா இருப்பாங்க?னு பேசிக்கிட்டுப்போனா. அதுதான் என் காரெக்டருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய பாராட்டு!

நீங்க வில்லி இல்லைன்னே வெச்சுக்குவோம். அந்த கடைசி ஸீன்ல உங்க முடிவைப் பார்த்து ரஜினி, `அதிகமா கோவப்படற பொம்பளையோட கதி இப்படித்தான்!’னு பேசிட்டுப் போறாரே? அது எந்த ரகம்..?

இந்தப் படத்துக்கு அவர் தாங்க ஹீரோ. அதனால அவர் அப்படித்தான் டயலாக் பேச முடியும். தவிர, ரஜினிகிட்ட மக்களும் இதைத்தானே எதிர்பார்க்கிறாங்க?

படத்துல நீங்க ஜெயலலிதா இல்லைன்னுட்டீங்க. சரி, நிஜத்துல ஜெயலலிதா பத்தி என்ன நினைக்கிறீங்க..?

அவங்க அரசியல் பத்திக் கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அது பத்தி எதுவும் தெரியாது. எனக்கு அவங்க டான்ஸ், நடிப்பு எல்லாம் பிடிக்கும். பர்சனலா சொல்லணும்னா, இந்த ஆணாதிக்க உலகத்துல ஒரு பெண் இந்த அளவுக்குத் தன் துறையில பெரிய இடத்தைப் பிடிச்சிருக்காங்களேன்னு எனக்குப் பெருமிதம்தான்.

படத்து ரெட்டை கதாநாயகிகள். அதுல நீங்க ரஜினியோட ஜோடி சேர முடியாமப் போகுதேன்னு உங்களுக்கு வருத்தமில்லையா?

ஹீரோவோட ஜோடி சேர்ற ரோல்தான் தொண்ணுத்தொம்பது படங்கள்ல பண்றோமே… அதுலேர்ந்து புதுமையா இந்த நீலாம்பரி காரெக்டர் இருக்கிறதே எனக்கு மகிழ்ச்சிதான். இதுல என் நடிப்பை வெளிப்படுத்த எக்கச்சக்க ஸ்கோப் கிடைச்சுது. எனக்கு அது போதும். தவிர, ரொம்ப காலமா தமிழ்ப் படமே பண்ணியிராத எனக்கு, ‘படையப்பா’ ஒரு பிரமாண்டமான ரீ-என்ட்ரி! இதைவிட எனக்கு வேற என்ன வேண்டும்.

Ramyakrishnan

ரஜினிக்கு எதிர்ப்பா படத்துல நிறைய வேலை பண்றீங்களே..? உங்களை ரஜினி ரசிகர்கள் சும்மா விடுவாங்களா?

ரஜினிக்கு எதிரா யாரோ திட்டம் போட்டு எடுத்த படத்துலயா நான் நடிச்சிருக்கேன்.? ரஜினியே கதையை முடிவு பண்ணி, அவரே பணம் போட்டு எடுத்திருக்கிற படத்துல… அவர் அழைப்பினாலதானே அப்படி நடிச்சிருக்கேன்?! இதைக் கட்டாயம் அவர் ரசிகர்கள் வெறும் கதைதான்னு புரிஞ்சுப்பாங்க.

பதினாலு வருஷமா நடிக்கறிங்க. எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க..?

இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு சினிமாவுல மட்டுமே டூயட் பாடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். கல்யாணம் பத்தி யோசிக்கலை.

ஏன். உங்களுக்கு சரியான ஆள் யாரையும் நீங்க இன்னும் சந்திக்கலையா..?

இன்னும் நான் வேட்டையிலயே இறங்கலையே!

`படையப்பா’ ஷூட்டிங்ல ரஜினியுடன் சுவையான அனுபவம் ஏதாவது..?

அவரோட நடிக்கற, ஒவ்வொரு விநாடியும் சுவாரஸ்யம்தான். ‘படையப்பா’ யூனிட்ல லைட்மேன்லேர்ந்து, கூட நடிக்கறவங்க, டைரக்டர்னு எல்லார்கிட்டேயும், ‘வாழ்க்கைன்னா என்ன?!’னு கேட்டுக்கிட்டே இருந்தார் ரஜினி. எல்லாரும் விதவிதமா பதில் சொல்லியும் அவருக்குத் திருப்தியில்லே… அதுக்குப் பதில் உங்ககிட்டே இருந்தா, நீங்க சொல்லுங்களேன்னு கேட்டேன் நான். நல்ல கதையா இருக்கே… முப்பது வருஷமா நான் தேடித் தேடி, அதுக்கு விடை கண்டுபிடிச்சிருக்கேன். அதை அவ்ளோ சுலபமா உங்களுக்குச் சொல்லிட முடியுமா..? நீங்களே தேடிக் கண்டுபிடிச்சுக்குங்கன்னு சொல்லிட்டாரு.

சரி. வாழ்க்கைன்னா என்ன..?

அதை நான் முழுக்க வாழ்ந்து அனுபவிச்சுக் கண்டுபிடிக்கப் போறேன்! (விஷமமாகக் கண்சிமிட்டுகிறார்)

– சுபா வெங்கட்

படங்கள்: கே. ராஜசேகரன்

(18.04.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.