பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர்

இந்தியாவில் எப்போதும் தனித்தன்மையுடையது தமிழ்நாடு. சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு உள்ளிட்ட விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடு ஒருபடி மேலேதான் இருக்கிறது. அந்த படிக்கு விதையிட்டவர் பெரியார் என்றால் அதை விருட்சமாக்க ஆரம்பித்தவர் பேரறிஞர் அண்ணா. திகவிலிருந்து விலகி திமுகவை ஆரம்பித்து வாக்கரசியலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சி வெல்ல வேண்டுமென்றாலோ, மக்கள் மனதில் ஒருவர் முதலமைச்சராக நிலைக்க வேண்டுமென்றாலோ சமத்துவத்தை அடிநாதமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை தனது செயல்பாடுகளால் எழுதியவர் அண்ணா.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திற்கு நாடு என்று பெயர் இருப்பது தமிழ்நாடுக்கு மட்டும்தான். அப்படி, மெட்ராஸ், மதராஸ் என அழைக்கப்பட்ட நிலையை மாற்றி தமிழ்நாடு என பெயர் வைத்தவரும் அண்ணாவே. இப்படி பேரறிஞர் அண்ணாவுக்கு பல பெருமைகள் இருக்கின்றன. முக்கியமாக இந்தியாவில் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநில அரசியலுக்கும், சுயமரியாதைக்கும் தொடர்க்க புள்ளியாக இருந்தவர் அண்ணா.

இதனால் அவரது பிறந்தநாளை திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் இன்று.

இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

அதேபோல், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார். அண்ணா பிறந்தநாளையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் – ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் – நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக, திமுக முப்பெரும் விழா, நலத்திட்டங்கள் தொடக்க விழா உள்ளிட்டவைகளுக்காம மு.க. ஸ்டாலின் மதுரைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.