மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சில வருடத்துக்குப் பிறகு வெளியாகும் படம். ஜெயமோகன் கதை, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என உருவாகியிருக்கும் படம் குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேசினோம்.
இதுவரை வெளிவந்த கௌத்தம் மேனனின் கதைகளைத் தாண்டி இந்த கதையில் ஒரு மேஜிக் செய்திருப்பதாக தெரிகிறது காரணம் என்ன?
எல்லா திரைப்படங்களிலும் மேஜிக்கை எதிர்பார்த்து தான் எடுக்கிறேன். முதலில் சிம்புவுக்கு ஒரு காதல் கதை தான் இருந்தது. ரஹ்மான் சார் அதற்கு மூன்று பாடல்கள் இசையமைத்தார். ஒரு மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கும் அளவிற்கு அனைத்தும் நெருங்கியது. அப்போது வேறு ஒரு விஷயத்திற்காக ஜெய மோகன் சாரிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தபோது, பெரிய கேங்ஸ்டர்கள் பற்றி இல்லாமல் வேறு வழியில்லாமல் தவறு செய்பவர்கள் அவர்கள் எப்படி அதற்குள் செல்கிறார்கள் என்பது பற்றி ஒரு கதை எடுக்கலாம் என்று நினைப்பதாகக் கூறினேன். அவர் உடனே என்னிடம் அப்படி ஒரு கதை இருக்குறது என்று 15 நிமிடங்களில் ஒரு சிறுகதையாகக் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத் தொடர்ந்து என்ன ஆகும் என்று கேட்டேன். அதை வாசகர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன் என்று கூறினார்.

இது நல்லா இருக்கு என்று சொன்னதும் எனக்கு இதைப்போல் பல கதாபாத்திரங்களைத் தெரியும் என்று கூறி 100 பக்கத்துக்கு ஒரு கதை எழுதிக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர் இதை ஒரு புது முகத்தை வைத்து எடுத்தால் நன்றாக ஓடும் என்று சொன்னார். நான் அதற்கு இதை சிம்புவை வைத்து செய்யலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் சிம்பு என்றால் அனைவருக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு அடிப்படையான விஷயங்களை காட்ட வேண்டும் எப்படி சரி வரும் என்று கேட்டார். அதற்கு அது சரியாக வரும் என்று கூறி சிம்புவிடம் சென்று கதையை சொன்னேன் அவரும் ஏற்றுக்கொண்டார்.
இதில் மேஜிக் என்றால் ஒரு கதையை கேட்கும் போதே ஒரு ஸ்பார்க் வரும். அது மட்டும் இல்லமால் இது பெண்கள் பார்க்க வேண்டிய ஒரு கதை. அதுமட்டுமின்றி நம்மில் பலர் தனக்கு தெரியாமலே இந்த விதமான வாழ்க்கைக்கு வருகின்றனர். எனவே இது அனைவருக்கும் தேவையான ஒரு கதை.
சிம்புவின் ஹீரோயிசம் இக்கதையில் எப்படி இருக்கும்?
ஹீரோயிசம் என்றால் என்ன? என்னைப் பெறுத்தவரை ஒரு ஆண் காரில் இருந்து இறங்கி ஒரு பெண் இறங்குவதற்கு கதவை திறந்து விட்டாலே அது ஹீரோயிசம் தான். இந்தக் கதையில் ஒரு சாதாரண மனிதன் தன்னை யாராவது எதிர்க்க வந்தால் அதை எப்படி எதிர்பானோ அப்படி தான் இருக்கும். இதிலும் காதல், சண்டை என அத்தனை ஹீரோயிசமும் இருக்கும்.
இக்கதையின் இரண்டாம் பாகம் ஜெய மோகன் சார் உங்களிடம் பேசும் போதே முடிவு செய்யப்பட்டதா?
கதையை பார்க்கும் போதே 5 வருடங்கள் கழித்து என்ன ஆகும் அவன் என்ன செய்வான் என்ற கேள்வி அனைவருக்கும் வரும். அதற்கு பதில் தான் இரண்டாம் பாகம். எனென்றால் 2.30 மணி நேரத்தில் அனைத்தையும் சொல்ல முடியாது. அதை தாண்டியும் எடுக்க முடியாது. எனவே இதற்கு இரண்டாம் பாகம் வேண்டும் என்று முடிவெடுத்தோம். இதை தயாரிப்பாளரிடமும், சிம்புவிடமும் கதை முடியும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சொன்னேன். சிம்பு இதை இப்படியே முடிக்கலாமே என்று கேட்டார் அதற்கு நான் இக்கதை இப்படி முடியாது இதற்கு இது முடிவு இல்லை என்று கூறினேன்.அதற்கு சிம்பு முதலில் இது வெற்றி பெற வேண்டுமே அதற்குள் எப்படி என்று கேட்டார் எல்லாருமே படம் வெற்றி பெறும் என்று நினைத்து தானே எடுக்கிறோம். அதற்கு சிம்பு, நிச்சயமாகச் செல்கிறீர்களா? இல்லை இப்படியே முடிக்கலாமா? என்று கேட்டார். உங்களுக்காக வேண்டுமானால் இப்படியே முடிப்பது போல் படத்தை எடுப்போம் ஆனால் அது காட்சிப்படுத்தபடாது. பார்ப்பவர்களுக்கு இரண்டாம் பாகம் வரும் என்று ஒரு எண்ணம் வரும் என்றேன்.
`காக்க காக்க’ சூர்யா,`விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு, போன்ற கதாபாத்திரங்களை மென்மையாக காண்பித்த நீங்கள் வெற்றிமாறன் சார் கதைகளை போல சிம்புவை ஒரு ரக்கடாக காட்டியது ஏன்?
`காக்க காக்க’ படத்தில் பாண்டியா கதாபாத்திரம் ரக்கட் தான். இப்படத்தில் முத்துவாக இருக்கும் சிம்புவுக்கு இயற்கையிலேயே அந்த பாண்டியா போல கொலை செய்யும் எண்ணம் இல்லை. அவர் சூழ்நிலையால் அப்படி மாறுகிறார் எனவே அதற்கு அந்த ரக்கட் வேடம். இதற்கு உத்வேகம் வெற்றிமாறன் படங்களாகக் கூட இருக்கலாம். எனக்கு அவரது வேலைகள் மிகவும் பிடிக்கும். மேலும், வெற்றிமாறன் சார் தான் ஜெய மோகன் சாரை அறிமுகப்படுத்தினார். அவரின் நம்பரைக் கொடுத்தார். `நான் அவரின் சிறுகதையில் தான் விடுதலை படம் பண்ணுகிறேன் நீங்களும் பேசுங்கள் கண்டிப்பாக அவர் பேசுவார்’ என்று கூறியது வெற்றிமாறன்தான்.