லண்டன்:பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 1,000 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த அரசாட்சியை வழிநடத்தி செல்வதில் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, சர்வதேச தலைவர்களும், பிரிட்டன் மக்களும் திரண்டு வந்து நேற்று முன் தினம் பிரியாவிடை அளித்தனர்.லண்டனின் விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள கல்லறையில் ராணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 1,000 ஆண்டுகள் பழமையான பிரிட்டன் அரச குடும்பத்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார்.
பிரிட்டன் மக்களுக்கு ராணியின் மீது தனிப்பட்ட பாசமும், அன்பும் இருந்த காரணத்தால், அந்த சமூகத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தின் பங்கு இதுவரை விவாதத்திற்கு உள்ளாகாமல் இருந்தது.ராணியின் மறைவுக்கு பிறகும் இதே நிலை நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்ற 1952ல் அந்நாட்டில் இருந்த நிலை வேறு. ஆனால் இன்றைய பன்முக கலாசாரத்துக்கு அரச குடும்பத்து ஆட்சிமுறை பொருந்துமா என்ற கேள்வி நிச்சயம் எழும் என கூறப்படுகிறது.
இது குறித்து லண்டனின் சிட்டி பல்கலையின் வரலாற்று பேராசிரியர் அனா ஒயிட்லாக் கூறியதாவது:பல மதங்கள், இனங்கள்வாழும் சமூகத்தில் முடியாட்சிக்கு எந்தவிதமான இடம் இருக்கும் என்பது தெரியவில்லை. இது நாட்டுக்கு சரியாக இருக்குமா. உலக நாடுகள் பிரிட்டன் குறித்து என்ன நினைக்கும். இது போன்ற பல கேள்விகளுக்கு மன்னர்சார்லஸ் பதில் அளிக்க வேண்டியது இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement