காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நாளை வேட்பு மனுதாக்கல்: சோனியா, ராகுல், பிரியங்கா போட்டியில்லை; அரை டஜன் தலைவர்கள் களம் இறங்குவதால் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நாளை வேட்பு மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில், சோனியா, ராகுல், பிரியங்கா போட்டியிட மாட்டார்கள் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதனால் அரை டஜன் மூத்த தலைவர்கள் தலைவர் பதவிக்கு களம் இறங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் நாளை (செப். 24) முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மனுக்கள் அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடக்கும். அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடுவாரா, இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தலைவர் தேர்தலில் குதிக்கலாம் என்று தெரிகிறது.

அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் சசிதரூர், மனீஷ் திவாரி, மல்லிகார்ஜூன கார்கே, திக் விஜய் சிங் ஆகியோரின் பெயர்களும் உள்ளன. முன்பு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், பெயரளவில் நடைமுறைக்காக நடந்தது. ஆனால் இந்த முறை உண்மையான போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக நேற்று முன்தினம் அசோக் கெலாட், சசிதரூர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதனன் மிஸ்திரியை சந்தித்து தேர்தல் முறைகள் குறித்து விசாரித்தனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றால், ராஜஸ்தான் முதல்வராக இருப்பீர்களா? என அசோக் கெலாட்டிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘இரு பதவிகளிலும் இருப்பதால் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை. எந்த பதவியும் இல்லை என்றாலும் கவலையில்லை. ராகுலுடன் சேர்ந்து மக்களை திரட்டி, பாஜக கொள்கைகளுக்கு எதிராக போராடுவேன்’ என்றார். ராஜஸ்தான் முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இரண்டிலும் இருக்க அசோக் கெலாட் விரும்புவது குறித்து கேரளாவில் ஒற்றுமை யாத்திரை நடத்திவரும் ராகுலிடம் கேட்டபோது, ‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையை ஆதரிப்பேன்’ என்று கூறினார். ராகுலின் இந்த பதில் அசோக்கெலாட்டின் முதல்வர் பதவி பறிபோகுமா? அவருக்கு பதிலாக ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கேரளா வந்துள்ள அசோக் கெலாட் நிருபர்களிடம் கூறுகையில், ‘காந்தி (சோனியா, ராகுல், பிரியங்கா) குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார். இருந்தும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தலைவர் பதவியை ராகுல் காந்தி மீண்டும் ஏற்குமாறு கேட்டுக் கொண்டேன். சில காரணங்களுக்காக நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் அடுத்த தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பில்லை. சில காரணங்களால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். எனவே நேரு குடும்பத்தைச் சேராதவர் தான் கட்சியின் அடுத்த தலைவராக வருவார்.

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி எந்த பதவியும் இல்லாமல் பணியாற்றுவேன் என்று கூறினார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடக்கிறது. நான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். அதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. நாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.