தந்தை, மகள் மீது தாக்குதல்; அரசு போக்குவரத்துக்கு விளம்பரங்கள் நிறுத்தம்: நகைக்கடை நிறுவனம் அதிரடி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே மலையின் கீழ் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமனன். சில  தினங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மகள் ரேஷ்மாவுக்கு பஸ் பாஸ் வாங்க காட்டாக்கடை அரசு பஸ் டெப்போ சென்றார். அப்போது கல்லூரியில் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி டெப்போ ஊழியர்கள் கூறினர். இது தொடர்பாக டெப்போவில் இருந்த  ஊழியர்களுக்கும், பிரேமனனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது, திடீரென அவரை டெப்போ ஊழியர்கள் தாக்கினர். தடுத்த ரேஷ்மாவுக்கும் அடி விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து உடனே அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தந்தை, மகளை தாக்கிய 4 பஸ்  ஊழியர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்யப்பட்டது. மேலும், சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தந்தை, மகளை தாக்கிய சம்பவத்தை கண்டித்து, கேரள அரசு போக்குவரத்துக்கு வழங்கி வந்த விளம்பரத்தை கோட்டயத்தை சேர்ந்த ஒரு பிரபல நகைக்கடை நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட  மாணவிக்கு படிப்பை முடிக்கும் வரை கல்லூரிக்கு சென்று வர போக்குவரத்து செலவாக ரூ50 ஆயிரம் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.