தமிழில் ரீமேக் ஆனது மலையாள 'இஷ்க்'

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மலையாள படம் இஷ்க். அனுராஜ் மனோகர் இயக்கி இருந்த இந்த படத்தில் ஷேன் நிகம், ஆன் ஷீத்தல் நடித்திருந்தனர். காதலனும், காதலியும் பிறந்த நாளை கொண்டாட நள்ளிரவு கார் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள், அப்போது கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்குகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. பெண்களின் மீது ஆண்களுக்கு இருக்கும் அதீத அக்கறை என்ற போர்வையிலான ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்திய படம். இந்த படம் தெலுங்கில் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் ஆசை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஈக்ல்'ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ளது. ஜீரோ படத்தை இயக்கிய ஷிவ் மோஹா இயக்கி உள்ளார். கதிர்,- திவ்யபாரதி நடித்துள்ளனர். ரேவா இசை அமைத்துள்ளார், பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை கூறியதாவது: இது போன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அதுதான் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை சீக்கிரம் முடிக்க உதவியது. இந்தப் படத்தில் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றிய பெரும்பாலானோர் என்னுடைய கல்லூரி கால நண்பர்கள் மற்றும் 'ஜீரோ' படத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது.

டெட்லைனுக்குள் வேலை சரியாக முடிக்க வேண்டும் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு வேலை பார்த்துள்ளோம். 'சுழல்' படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கதிர் கொண்டுள்ளார். இந்தப் படத்திலும் பாராட்டுதலுக்குரிய சிறப்பானதொரு நடிப்பை கொடுத்துள்ளார். திவ்யபாரதியும் குறைந்த காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். படத்தில் அவரது நடிப்பும் முக்கியமான ஒரு அங்கம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.