பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது ஒன்றிய அரசு.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான ஐந்து ஆண்டுகள் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்றால் என்ன?

நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரன்ட் என்ற அமைப்பு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக 2006ஆம் ஆண்டில் மாறியது. இது ஒரு இஸ்லாமிய அமைப்பு. நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஏன் இந்த தடை?

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் செப்டம்பர் 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

மேலும், இந்த அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் நாடு முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. நேற்று மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.