முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 63 டீஸ்பூன்களை 32 வயது மதிப்பு தக்க நபர் ஒருவர் விழுங்கி உள்ளார். அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்று பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த நபரின் பெயர் விஜய் என தெரிகிறது. அவரது சொந்த ஊர் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பொபாடா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவராம். அதன் காரணமாக மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வயிற்று பகுதியில் வலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி ஏதேனும் இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். அதன் பேரில் அறுவை சிகிச்சை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. விஜயின் வயிற்றில் ஸ்பூன்கள் இருந்துள்ளன. அதனை 2 மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இருந்தனர். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக ஸ்பூன்களை விழுங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருடன் தங்கியிருந்த நபர் ஒருவர் மறுவாழ்வு மையத்தில் வலுக்கட்டாயமாக அவர் ஸ்பூன்களை விழுங்க வற்புறுத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.