பிஎஃப்ஐ நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு கண்டுபிடிப்பு – என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது:

பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத அமைப்புகளின் சி.டி.க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இது போன்ற ஒரு ஆவணம், உத்தர பிரதேசத்தில், பாராபங்கி என்ற இடத்தில் பிஎஃப்ஐ தலைவர் முகமது நதீம் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், எளிதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான குறுகிய கால பயிற்சி குறித்த ஆவணம் உத்தர பிரதேசம், கத்ராவில் உள்ள பிஎஃப்ஐ தலைவர் அகமது பெக் நத்வி என்பவரது வீட்டில் கைப்பற்றப்பட்டது.

நாடு முழுவதும் 17-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றின் மீது 1,300 குற்ற வழக்குகளை போலீஸாரும், என்ஐஏ.,வும் பதிவு செய்துள்ளன.

மகாராஷ்டிராவில் உள்ளபிஎஃப்ஐ துணை தலைவரிடம் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் மற்றும் சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டன. இவை 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது தொடர்பான ஆவணங்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பிஃப்ஐ தலைவர் வீட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, கஜ்வா-இ-ஹிந்த் அமைப்பு தொடர்பான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பிஎஃப்ஐ அமைப்பின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயக கட்சி கூறுகையில், ‘‘பாஜக அரசின் இந்த தடை, இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம், மக்கள் உரிமைகள் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல்’’ என கூறியுள்ளது.

பிஎஃப்ஐ கண்டன அறிக்கை

பிஎஃப்ஐ விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மத்திய அரசின் சோதனை மற்றும் கைது நடவடிக்கை ஒரு நாடகம், இது தீவிரவாதத்தை தூண்டும். என்ஐஏ.,வும், அமலாக்கத்துறையும், மத்தியில் இந்துத்துவா ஆட்சியாளர்களின் கையில் உள்ள இரண்டு மிரட்டும் ஆயுதங்கள். பிஎஃப்ஐ அமைப்பு கடந்த 30 ஆண்டுகளில், இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி செல்வதை தடுத்து, அவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தி, இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றவும், ஜனநாயகத்தை மதிக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது’’ என கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.