விரைவில் சட்ட சபை தேர்தல்; திரியை கொளுத்தும் எடப்பாடி!

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் ஆளுயர மாலை அணிவித்து மேள தளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோரும் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படி தான் இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 16 மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த 16 மாதங்களில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து இருக்கிறது? என்பதனை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நான் அவதூறு பேச வில்லை. உண்மை நிலையை தான் கூறுகிறேன்.

திமுகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லை. அதே மக்கள் திமுக ஆட்சி எப்போது போகும் என்றே சொல்ல தொடங்கிவிட்டனர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. திமுக தேர்தலின்போது பல வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி விட்டது. அதிமுக ஊழல் செய்தது என சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.

திமுக அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. சொத்து வரி, மின் கட்டணம் என வரியை உயர்த்தி 2 போனஸ்களை மக்களுக்கு தந்து உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை, அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.