4 பகுதிகளை இணைத்த ரஷ்யா – 'நேட்டோ'வில் சேர உக்ரைன் அவசரம்!

நேட்டோ அமைப்பில் சேருவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமர்ப்பித்து உள்ளார்.

சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து விலகி உக்ரைன் தனி நாடானது. எனினும், அந்நாட்டின் மக்களின் மொழி, கலாச்சாரம், பண்புகள் உட்பட அனைத்தும் ரஷ்யா உடன் ஒத்துப் போவதால், அந்நாட்டை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே, ரஷ்யா கருதி வருகிறது.

இதற்கிடையே, நடப்பு ஆண்டு தொடக்கத்தில், பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாடு மீது போர் தொடுக்க, கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டார்.

இதன்படி, உக்ரைன் நாட்டுக்குள் புகுந்த ரஷ்யப் படைகள், அந்நாட்டின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தின. இரு நாடுகளுக்கு இடையேயான போர் உலக அரங்கையே அதிர வைத்தது. போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் உலக நாடுகளின் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும், அவர் அதை கேட்கவில்லை. பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதற்கிடையே உக்ரைன் நாட்டின் நான்கு பகுதிகளை ரஷ்யப் படைகள் ஒட்டு மொத்தமாக கைப்பற்றின.

Russia – Ukraine War: உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பதா..? – ரஷ்யாவுக்கு ஐ.நா கண்டனம்!

இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் நான்கு பகுதிகள், ரஷ்யாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின், டோனெட்ஸ்க், லுஹன்ஸ்க், கெர்சான், ஜப்போரிஸியா ஆகிய பகுதிகள், இன்று முதல், அதிகாரப்பூர்வமாக, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதால், அலர்ட் ஆன உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விரைவான விண்ணபத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளோம். ரஷ்ய அதிபராக புடின் இருக்கும் வரை உக்ரைன், ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது. புதிய அதிபருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.