ஆணுறுப்பில் வெடிப்பு, எரிச்சல்… என்ன பிரச்னை இது? |காமத்துக்கு மரியாதை – S 3 E 10

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறப்புறுப்பில்தான் எத்தனையெத்தனை பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அவை அத்தனைக்குமே மருத்துவத்தில் தீர்வுகள் இருக்கின்றன. பிரச்னையின் காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சை பெற்று, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் பிறப்புறுப்புப் பிரச்னைகளை கூச்சப்படாமல் ஒரு பாலியல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான பாலமாகவே, விகடனின் `காமத்துக்கு மரியாதை’ தொடர். கடந்த ஒரு வருடமாக இருந்து வருகிறது.

காமத்துக்கு மரியாதை

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதுபோல, அவர்தம் பிரச்னைகளும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன. விகடன் வாசகர் ஒருவர் அவருடைய பிரச்னையை மெயில் செய்திருந்தார். அதில், “என்னுடைய ஆணுறுப்பில் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. மனைவியுடனான உறவுக்குப் பிறகு ஆணுறுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்கிறேன். தவிர, ஆணுறுப்பின் முன்பகுதியில் வெள்ளைப்படலம் இருப்பதோடு, கெட்ட வாடையும் வருகிறது. எனக்கு ஏதாவது பிரச்னையா’ என்று கேட்டிருந்தார். இவருடைய பிரச்னைக்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி தீர்வு சொல்கிறார்.

“இவருடைய பிரச்னையை மருத்துவரீதியாக பேலனிட்டீஸ் (Balanitis) என்போம். ஆணுறுப்பின் முன்பகுதியில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அது, அநேகமாக பூஞ்சைத் தொற்றாக இருக்கலாம்.

ஆணுறுப்பின் முன்பகுதியில் வெள்ளைப்படலம் படிந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆண்கள் தம் உறுப்பைச் சற்று கவனித்தால், அதன் முன்பகுதியில் கால்வாய்போல ஓர் இடைவெளி இருக்கும். அந்த இடத்தில் ஸ்மெக்மா என்றொரு திரவம் சுரக்கும். அதிலிருந்து வித்தியாசமான வாடை வரும். அதைக் கெட்ட வாடை என்று சொல்ல முடியாது. என்றாலும், அந்த வாடையை சிலர் அசெளகர்யமாக உணரலாம். தினமும் குளிக்கும்போது, ஆணுறுப்பின் முன்தோலை பின்னுக்குத் தள்ளி அந்தப் பகுதியை வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே அசெளகர்யமாக ஃபீல் ஆகாது. ஆணுறுப்பை இப்படி சுத்தம் செய்ய வேண்டுமென்கிற விழிப்புணர்வே பல ஆண்களுக்கு இருப்பதில்லை. அதனால், குழந்தைப் பருவத்திலேயே ஆண்களுக்கு சுத்தம் செய்யும் முறையை கற்றுத் தந்துவிட வேண்டும்.

Dr. Narayana Reddy

ஆணுறுப்பில் கெட்ட வாடை வந்தால், நான் சொன்னதுபோல தொற்று ஏற்பட்டிருக்கும். தவிர, நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும் ஆணுறுப்பில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு கெட்ட வாடை வரும். இந்தப் பூஞ்சைத்தொற்று காரணமாக ஆணுறுப்பு உலர்ந்து, வெடிப்பும் விடலாம்.

பெண்களுக்கு ட்ரைகோமோனஸ் வெஜைனிட்டிஸ் (Trichomonas vaginitis) என்கிற தொற்று இருந்தால், அவர்களுடைய கணவர்களுக்கு ஆணுறுப்பில் கெட்ட வாடை, வெடிப்பு, எரிச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை சரியாக வேண்டுமென்றால், கணவன், மனைவி இருவருமே ஒரே நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு மட்டுமே சிகிச்சையளித்தால், கணவரிடமிருந்து மனைவிக்கு, மனைவியிடமிருந்து கணவருக்கு என்று பரவிக்கொண்டே இருக்கும். சரி செய்யக்கூடிய பிரச்னைதான் என்பதால், வாசகர் பயப்பட வேண்டியதில்லை” என்ற டாக்டர் நாராயண ரெட்டி, அனைவருக்குமான ஹைஜீன் டிப் ஒன்றையும் வழங்கினார்.

sex education

ஆணோ, பெண்ணோ உங்களுடைய பிறப்புறுப்பில் வெடிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால் வெஜிடபுள் ஆயில்களை அந்தப் பகுதியில் தடவாதீர்கள். கிருமிகள் வளர்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி வாட்டர் பேஸ்டு லூப்ரிகேஷனை பயன்படுத்துங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.