சந்தர்ப்பவாத அரசியல்வாதி… காந்தியை அம்பேக்தர் இவ்வளவு கடுமையாக சாட என்ன காரணம்?

இரண்டாம் வட்ட மேசை மாநாடு:
தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அம்பேத்கருக்கு இருந்த செல்வாக்கையும், ஆதரவையும் அறிந்த பிரிட்டிஷ் அரசு, 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற அம்பேத்கருக்கும் அழைப்பு விடுத்தது.

இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய முற்பட்டபோது மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் குறித்து முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட அந்த முக்கியமான மாநாட்டில், ஆதிக்க சாதிப்பிரிவினர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள் என அனைத்து வகை மக்களுக்கும் தனி தொகுதிகள் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதில் முக்கியமாக, பட்டியலின மக்களுக்காகத் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும், சாதி இந்துக்கள் என்றும் பிளவுபடுவதைத் தாம் விரும்பவில்லை என்றும் காந்தி கூறினார்.

உண்ணாவிரதம்:
ஆனால், அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதிகளை ஒதுக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, புணே ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி அங்கே உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது அந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார். காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; பட்டியலின மக்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம் என, இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.

புணே ஒப்பந்தம்:
காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தின்படி, அப்போதைய மாகாணச் சட்டப்பேரவைகளில் 148 இடங்களைத் பட்டியலின தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் மத்தியச் சட்ட அவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து சதவீதம் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும், அதில் அனைத்து சமூகத்தினரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவானது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் புணே உடன்படிக்கையில் கையெழுத்து இட்டனர். ராஜகோபாலாச்சாரி, இரட்டைமலை சீனிவாசன், ராஜேந்திரப் பிரசாத், எம்.சி. ராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார்.

சந்தர்ப்பதவாத அரசியல்வாதி:
புணே உடன்படிக்கையில் அம்பேத்கர் கையெழுத்திட்டாலும், பட்டியலினத்தவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கமே தனித்தொகுதிகளை ஒதுக்கு முன்வந்தபோது, அதனை காந்தி தமது பிடிவாத குணத்தால் கெடுத்துவிடடார் என்ற கோபம் அம்பேத்கருக்கு இருக்கவே செய்தது. காந்தி மீதான அவரது கோபம் இவ்வாறு வார்த்தைகளாக வெளிப்பட்டது.

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவரின் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,

“காந்திஜி உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்கமாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!” என்று காந்தியை நேருக்கு நேராக பார்த்தே அம்பேத்கர் சொன்னதாக வரலாறு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.