மாணவர் அரங்கம் ஆசிரியர்களே மாணவர்களுக்கு முதல் பெற்றோர்: சுய ஒழுக்கத்தில் சிறப்பாக செயல்படும் தொடக்கப்பள்ளி

நன்னடத்தை, ஒழுக்கம், சுகாதரம், நேர்மை என ஆரம்ப பள்ளி நாட்களிலேயே மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தினை கற்று கொடுக்கும் பள்ளியாக செயல்படுகிறது இந்த தொடக்கப்பள்ளி. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் இந்த தொடக்கப்பள்ளியில், தமிழ் வழி கல்வியில் 27 மாணவ – மாணவிகளும், ஆங்கில வழி கல்வியில் 85 மாணவ – மாணவிகளும் என மொத்தம் 112 மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். நகர்புற மாணவர்கள் பெறுகின்ற கற்றல் கற்பித்தல் சூழ்நிலையை கிராமபுற மாணவர்களும் பெறவேண்டும் என்ற உயரிய சிந்னையுடன் இப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு செயல்பட்ட இந்த தொடக்கப்பள்ளியில் தற்போது 112 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்து, நல்வழிப்படுத்தும் பள்ளிக்கூடத்தின், தலைமை ஆசிரியர் வெஸ்லியிடம் பேசினோம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் முதல் பெற்றோர் என கூறும் வெஸ்லி, வகுப்பறை என்பது ஒவ்வொரு மாணவனின் முதல் அனுபவம், முதல் மேடை, முதல் உலகம் என்றால் மிகையாகாது. குழந்தைகளுக்கு வாழ்க்கையில் தொடக்கம் என்பது வகுப்பறைதான். அந்த வகையில் மாணவர்களின் 2வது கருவறை வகுப்பறைகளாகதான் இருக்க முடியும். அதை உணர்ந்தே மாணவர்களை வளர்த்து எடுக்கிறோம். மாணவர்களை பொருத்தவரை ஆசிரியர்கள் தான் முதல் பெற்றோர்கள். அந்த உணர்வோடுதான் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார். எண்ணும் எழுத்தும் வகுப்பறை: குழந்தைகளின் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் தொடக்க கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், தொடக்க வகுப்பு குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிபடுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட திட்டம் எண்ணும் எழுத்தும்.

இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் செயல்பட்டு வந்தாலும், எந்த பள்ளியிலும் இல்லாத அளவுக்கு, 1 முதல் 3ம் வகுப்பறை வரை குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை செயல்படுகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டு செயல்பாட்டில் உள்ளது. நேர்மை அங்காடி: இந்த பள்ளியில் மாணவர்களிடையே நேர்மை, உண்மையை வளர்க்கும் எண்ணத்தில் பள்ளியில் நேர்மை அங்காடி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உண்டியலில், பணத்தை போட்டுவிட்டு, படிப்பு சம்மந்தமாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இது மாணவர்களிடையே நற்பண்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வாங்க படிக்கலாம்: தொடக்க நிலையிலிருந்தே மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், பள்ளியில் நூலக அறை செயல்படுகிறது. இது புத்தகத்தை வாசி புத்தகத்தை நேசி என்ற உணர்வினை மாணவர்களிடையே வளர்க்கிறது.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு சுத்தமே சுகாதாரம் என்பதற்காக சுத்தமான சுகாதாரமான கழிவறை உள்ளது. எல்லாபுரம் ஒன்றியத்திலேயே இப்பள்ளி 2017-18ம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருது, மாவட்ட கலெக்டரிடம் சுத்தம் சுகாதாரத்திற்கான விருது, பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் வெஸ்லி ராபர்ட்டின் சேவையை பாராட்டி டாக்டர் ராதாகிருஷ்ணணின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் மனசு என்ற பெட்டி, மாணவர்களின் புகார் பெட்டி, நேர்மை பெட்டி என 3 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எண்ணங்கள், அவர்களின் நிறை குறைகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. எந்த ஒரு பொருளோ அல்லது பணமோ கீழே கிடந்தால் கூட அதன் உரிமையாளர் யார் என தெரியாமல் போனால் அதை மாணவர்கள் நேர்மை பெட்டியில் போட்டுவிடுவர். நன்னடத்தை, ஒழுக்கம், சுகாதாரம் என எல்லாபுரம் ஒன்றியத்திலேயே சிறந்த பள்ளியாக இது செயல்படுகிறது.

*மாணவ செல்வங்களே…!
திங்களன்று வெளியாகும் இப்பகுதிக்கு கல்வி, விளையாட்டு, கலைப்பிரிவுகளில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் தனித்திறன் படைப்புகளை உங்களின் தலைமையாசிரியர் கையெழுத்துடன் அனுப்பி வைக்கலாம். புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சிறப்புடன் செயல்படும், தனித்துவமிக்க அரசுப்பள்ளிகள் குறித்த தகவல்களை, ஆசிரியர்கள் உரிய விபரங்களுடன் எழுதி படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.