இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர். வீண் சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு பெர்செபயா சுரபயா கால்பந்து அணியின் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஆடுகளத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசி எறிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆடுகளத்துக்குள் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மைதானத்துக்கு வெளியிலும் பரவியது. வன்முறையாளர்கள் போலீஸ் வாகனங்களை அடித்து, நொறுக்கி தீ வைத்தனர். இதையடுத்து, வன்முறையாளர்களை விரட்டி அடிக்க மைதானத்துக்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் மைதானம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கண்ணீர் புகையில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை விட்டு வெளியேறும் பாதையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இதில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் கூட்டத்தினரின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கினர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இப்படி இந்த துயர சம்பவத்தில் இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, “இந்த சோகத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இது இந்த நாட்டின் கடைசி கால்பந்து சோகம் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற மற்றொரு மனித சோகம் நடக்க வேண்டாம். இந்தோனேசிய தேசத்தின் விளையாட்டுத்திறன், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவ உணர்வை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்” என கூறினார்.

இந்தோனேசியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பிபா யூ20 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு இந்த கால்பந்து போட்டி துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது உலக அளவில் விளையாட்டு போட்டியின்போது ஏற்பட்ட மிப்பெரிய பேரழிவு சம்பவமாக அமைந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.