திருப்பதி மலைப்பாதையில் தோளில் மனைவியை தூக்கிச்சென்ற கணவர்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் தோளில் மனைவியை கணவர் தூக்கிச்சென்ற வீடியோ வைரலானது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடையம் அடுத்த  கடியபுலங்காவை சேர்ந்தவர் வரதவீரவெங்கட சத்தியநாராயணா என்கிற (சத்திபாபு),  லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு திருமணம் ஆனது. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் தாத்தா பாட்டி ஆகினர். இந்நிலையில், இவர்களின் மூத்த மருமகன் குருதத்தா (சந்து) ஒரு நல்ல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு  தனது பெற்றோர் மற்றும் அத்தைகள் அனைவரையும் திருமலைக்கு அழைத்து வருவேன் என்று வேண்டிக் கொண்டார்.  அவ்வாறு, வேலை கிடைத்தவுடன் உறவினர்கள் 40  பேருடன் பஸ்சில் திருப்பதிக்கு அழைத்து வந்தார்.

அப்போது, அனைவரும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்ல முடிவு செய்து படியில் ஏற தொடங்கினர். சத்திபாபு வேகமாக படியில் ஏறி சென்ற நிலையில் லாவண்யா மெதுவாக நடந்து வந்தார். வேகமாக வரும்படி சத்திபாபு  கூறியதால் தன்னால் நடக்க முடியவில்லை. உங்களால் முடிந்தால் என்னை தூக்கி செல்லுங்கள் என விளையாட்டாக கேட்டார். உடனடியாக மனைவி லாவண்யாவை தோளில் சுமந்தபடி தூக்கிக் கொண்டு சத்திபாபு படியில் ஏற தொடங்கினார். இதைப்பார்த்த சக பக்தர்கள் இதனை வீடியோ எடுக்க தொடங்கினர்.

அவ்வாறு  ஒன்றல்ல இரண்டல்ல  70 படிக்கட்டுகள் ஏறினார். பின்னர், லாவண்யா கீழே இறக்கும்படி கேட்டுக்கொண்டதால் சத்திபாபு மனைவியை கீழே  இறக்கினார். இதுபோன்று காதலர்கள், புதுமண தம்பதிகள் செய்வது இயல்பு. ஆனால், திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனாலும் மனைவி கேட்டதால் படியில் தோளில் மனைவியை சுமந்து எடுத்து சென்ற வீடியோ  தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.