அமித் ஷா வரும் நேரத்தில் பயங்கரம்… அதிர்ந்த ஜம்மு… இண்டர்நெட் வசதி கட்!

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராஜௌரி மற்றும் பாராமுல்லா ஆகிய நகரங்களில் பாஜக சார்பில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் இன்றும், நாளையும் நடத்தப்படவுள்ளன. இதில் அமித் ஷா கலந்து கொள்கிறார். இதுதவிர அரசு அதிகாரிகள் உடன் உயர்மட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதையடுத்து மூத்த பாஜக தலைவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீர் என்றாலே எல்லை தாண்டிய பயங்கரவாத நிகழ்வுகள் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். அப்படி எதுவும் நடைபெறக் கூடாது என்று எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முக்கியப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவம், போலீசார், துணை ராணுவம் ஆகியவை ஒன்றிணைந்து சேச்ரா வனப்பகுதியில் ஏதேனும் சந்தேகப்படும் படியான விஷயங்கள் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

உதய்வாலா பகுதியில் வசித்து வந்த சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா (57) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஜிபியின் உதவியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேசமயம் கொலையில் எந்தவித பயங்கரவாத தொடர்பும் இல்லை என்றும், குடும்ப பிரச்சினை காரணமாக நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜம்முவில் மொபைல் இண்டர்நெட் வசதி முடக்கப்பட்டுள்ளது. அமித் ஷா சுற்றுப்பயணத்தின் போது கொலை நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுமுதலே காஷ்மீரை பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. போராட்டம், கைது, வீட்டுக் காவல் என அதிரடியான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

அதேசமயம் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான அனைத்து விஷயங்களையும் செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் பஹாரி சமூக மக்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை இந்த சுற்றுப்பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.