இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: அக்டோபர் இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி இடையே 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் (வழி: கெல்லீஸ் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் (தியாகராய நகர்), மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 5-வது வழித்தடம் (வழி: மேடவாக்கம்) ஆகிய 3 வழித்தடங்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 42.6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

23 சுரங்கம் துளையிடும் இயந்திரம்: உயர்மட்ட பாதையைவிட சுரங்கப்பாதைப் பணி மிகவும் சவாலாக இருக்கும் என்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுரங்கப்பாதைப் பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக, சீனாவில் இருந்து மாதவரத்துக்கு முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த ஜூன் மாத இறுதியிலும், 2-வது சுரங்கம் துளையிடும் இயந்திரம் பசுமை வழிச்சாலைக்கு ஆகஸ்ட் மாதத்திலும் வந்தடைந்தன. இதுதவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பாகங்களை ஒருங்கிணைத்து, சோதிக்கும் பணி நடைபெறுகிறது, இதுதவிர, இரண்டு சுரங்கம் துளையிடும் இயந்திரங்களின் பாகங்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளன. இவற்றை வெவ்வேறு இடத்தில் வைத்து, ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், மாதவரம் பால்பண்னை அருகில் சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் பால்பண்ணை முதல் தரமணி வரையிலான 21 கி.மீ.க்கு இரண்டு சுரங்கப் பாதைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, சுரங்கம் தோண்டுவதற்கு முன்பான, ஆரம்பக்கட்ட பணி, சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. சீனா, புனே உள்பட 4 இடங்களில் 15 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுமை வழிச்சாலையில் மற்றொரு சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பணி நவம்பர் மாதத்தில் தொடங்கும். சேத்துப்பட்டில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. 4 சுரங்கம் தோண்டும் இயந்திரம் தயாராகி வருகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் 4 சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.