ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை அதிகரிப்பு..! நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வேயில் ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை (Quite Quitting) மனப்பான்மையோடு பணியாற்றுவது அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று அந்த சர்வே எச்சரித்துள்ளது.

அமைதியாக வெளியேறுவது  என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு உழைப்பது அந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.

நிறுவனத்தின் மீது கொண்டுள்ள விசுவாசம், நிறுவனத்தால் ஊழியருக்கு கிடைத்துள்ள பலன்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் கூடுதல் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் செய்வர். அதற்கு மாறாக ஒரு ஊழியர் கடமைக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்து கூடுதல் பொறுப்புகளை  தட்டிக் கழிக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். அவ்வாறு கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் அமைதியான மனநிலையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆவர்.

 அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சியில் வெறும் 35% ஊழியர்கள்தான் கூடுதல் பொறுப்புகளை மனமகிழ்ச்சியுடன் எடுத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு கூடுதலாக 65% ஊழியர்கள் கடமைக்கு அலுவலகத்தில் பணியாற்றுவதாக அந்த சர்வே தெரிவிக்கிறது.

அதுவே ஐரோப்பாவில் மிகக் குறைவாக 15% ஊழியர்கள் மட்டுமே கூடுதல் பொறுப்புகளை எடுத்து பணி புரிவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மனநிலை அதிகரித்ததற்கு கொரோனா நோய் தொற்றும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டவுடன் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய கேட்டுக் கொண்டன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தமது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய கூறினர். அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் பொழுது அந்த நிறுவனத்துடன் கூடுதல் ஒட்டுதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஐ.டி வேலை

ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது சக ஊழியர்களுடன் பணி புரியும் வாய்ப்பு குறைகிறது. நமது நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 25 ஆயிரம் ஊழியர்கள் அந்த அலுவலகத்திற்கு ஒரு முறை கூட வராமல் தமது பணியை ராஜினாமா செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்முறையாக தமது கல்லூரி காலம் முடிந்து டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.   தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வது சகஜம்தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான பணி ராஜினாமாக்கள் நடைபெறுவதற்கு இந்த அமைதியான மனநிலையும் முக்கிய காரணமாக இருக்கிறது. 

மேலும் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் பொழுது நிறுவனங்கள் தமது ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அலுவலகத்திற்குச் சென்று வெளி உலகத்தை பார்க்கும் பொழுது ஒருவித மாறுதல் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

சக ஊழியர்களின் நட்பு, அவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது, அலுவலகத்தில் உள்ள கலாச்சாரத்தில் உள்ள பிடிப்பு போன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதற்கு மாறாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் பொழுது நான்கு சுவர்களுக்குள் தொடர்ந்து வேலை செய்வது அதிக மன அழுத்தத்தை ஊழியர்களுக்கு வழங்கும். இதுவும் ஊழியர்களின் இந்த மனநிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஊழியர்

 தகவல் தொழில் நுட்ப ஊழியர்களில் பெரும்பாலானோர் இன்னும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். பல நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தமது ஊழியர்களை அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வைக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வேலை செய்து பழக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் அலுவலகம் வருவது பிரச்னையாக தெரிகிறது.

 அதனால் அனைத்து ஊழியர்களையும் மீண்டும் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிக்கு அமர்த்துவதிலும் சிக்கல் தொடர்கிறது.

 இந்த அமைதியான மனநிலை நிச்சயம் அதிகரிக்கும் பொழுது நிறுவனங்களுக்கு பாதகமாக முடியும். மேலும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் பொழுது ஒரு ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரியும் போக்கு அதிகரித்துள்ளது. அவ்வாறு இரண்டு நிறுவனங்களில் ஒரு ஊழியர் பணி செய்வதற்கு மூன்லைட்டிங் என்று பெயர். இந்தப் பிரச்சனைக்கும் ஊழியர்களின் அமைதியான மனநிலை முக்கிய காரணமாக இருக்கிறது.

அதனால் இந்த பிரச்னையை விரைவாக தீர்ப்பது நிறுவனங்களின் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனை எவ்வாறு இந்த நிறுவனங்கள் சரி செய்ய இருக்கிறது என்பதை பொறுத்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சி பாதை இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.