சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 2024ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டமானது 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் ரூ.5.855 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும்.

இந்நிலையில் கடந்த மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி 20.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.5,855 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  

இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின்கட்ரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
 ‘‘பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிப்பதோடு, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு விரைவாக செயல்பட்டு வருகிறது. அதன்படி புதிய இந்தியாவின் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்தை இணைக்கும் வகையில் ரூ.5,800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான பறக்கும் ஈரடுக்கு மேம்பாலம் திட்டத்திற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.

மொத்தம் 20.5 கி.மீ. தொலைவில் அமைய உள்ள இந்த பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும்.  2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த திட்டமானது நிறைவடையும். சென்னை துறைமுகத்துக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக சரக்கு வழித்தடமாக செயல்படும். இதன்மூலம் சரக்குகளை கையாளுவதற்கு 48% அதிகரிக்கும். அதேபோல் பயண நேரம் 6 மணி நேரம் குறையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.