டிஆர்எஸ் பொதுக்குழு கூடுகிறது புதிய தேசிய கட்சி நாளை அறிவிப்பு

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் சந்திரசேகரராவின் தேசிய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜவுடன் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பிரதமர்  மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   சந்திரசேகர ராவ் அவரை சந்திக்காமல் தவிர்த்தார். காங்கிரஸ், பாஜ அல்லாத கட்சிகள் அடங்கிய  கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர்  ஈடுபட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி நாளை நடக்கும் விஜயதசமி பண்டிகை நிகழ்ச்சியில் தமது கட்சியை தேசிய கட்சியாக்கும்  அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில் கேசிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 11 மணி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில்  அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதற்கும் பொதுக்குழு  கூட்டத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது பற்றி கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கூட்டத்தின் நோக்கம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால்,தேசிய அரசியலில் அவர் இறங்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.