தமிழகத்தில் 2,748 காலியிடங்கள்.. உடனடியாக நிரப்ப அரசு உத்தரவு..!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர்.

இதில், 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 தேதி வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.

இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்.

தாசில்தார்கள் மூலம், தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும், அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு கலெக்டர்கள் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.