சென்னை: இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் திட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ), எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில், பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.
பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை
தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிஎஃப்ஐ மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம், கேரள மாநிலங்களில் இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இரு மாநிலங்களிலும் இந்து இயக்கத் தலைவர்கள் உஷாராக இருக்குமாறும் மத்திய உளவுத் துறை அறிவுறுத்தியது. குறிப்பாக, கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 5 பேரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல, தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பு நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் ஆகியோரும் கவனமுடன்இருக்குமாறும், வெளியில் செல்லும் போது உஷாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரள மாநிலத்தில் குறிப்பிட்ட தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க அம்மாநில போலீஸார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதேபோல, தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இங்கு அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரும், வன்முறைக்கு முயல்வோரும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். எனவே, யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் யாரும் பயப்படத் தேவையில்லை’ என்றனர்.