சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும். நம் மக்கள் அனைவரும் ஒரு வருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம்போல ஒருங்கிணைந்த
உணர்வில் இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு நமது மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். அனைவரும் அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ
என மனமார்ந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள்புரியுமாறு உலகுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை வணங்குகிறேன். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் அனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அன்னை மகா சக்தியின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, பகையின்றி ஒற்றுமையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: வீட்டில் கொலு வைத்து எவரும் வந்து கொலுவை கண்டு செல்ல இல்ல கதவுகளை திறந்து வைத்து உறவுகளுக்கும் சொந்தங்களுக்கும் அழைப்பு வைத்து வணங்க வரும் அத்தனை பேரின் நல்வாழ்வுக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்யும் சிறப்புமிக்க விழா நவராத்திரி. கல்விக்கு கண் திறப்பு செய்யும் கலைமகளின் சரஸ்வதி பூஜை, தொழிலுக்கும், வணிகத்துக்கும் அருள் புரியும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற்று, நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்
துகள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: நேர்மறை சிந்தனைகளை மனதில் இருத்தி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித் திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம். உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும் நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதை செயலில் காட்டுவோம். அனைவருக்கும் நலமும் வளமும் நிறைந்திட அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.
சமக தலைவர் சரத்குமார்: தீய சக்தியை அழித்து, நல்ல சக்தியின் வெற்றியைக் குறிக்கும் தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழில் முன்னேற்றம் காணவும், நிறைவான செல்வமும், மகிழ்ச்சியும், மன நிறைவும், ஆரோக்கியமான நல்வாழ்வும் வாழ்ந்திட இறைவன் அருளட்டும்.
வி.கே.சசிகலா: தமிழக மக்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு வாழ்ந்து, அனைத்து வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் சிறந்து விளங்கிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தேசிய முன் னேற்ற கழகத் தலைவர் ஜி.ஜி.சிவா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவிபச்ச முத்து உள்ளிட்டோரும் பொதுமக்களுக்கு ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.