சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1470 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 2017ம் ஆண்டு அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். 247 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 18 சிறப்பு சிகிக்சை வார்டுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 நவீன அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும் 750 படுக்கை வசதி, 64 ஐசியூ படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அம்ரித் மருந்துக்கூடம், ஜன் அவுசதி மையம், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு 30 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 100 மருத்துவ மாணவர்கள் மற்றும் 60 நர்சிங் மாணவர்கள் படிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
