உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த ஜோ பைடன்

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைன்-ரஷியா போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொலைபேசியின் உரையாடலின் போது, நான்கு HIMARS மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய புதிதாக 625 மில்லியன் டாலர் அளவுக்கு உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்யப்படும் என்று ஜெலனஸ்கியிடம் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வரை உக்ரைனுக்கு ஆதரவைத் தொடரும் என்றும், நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை ரஷியா இணைத்துக்கொண்டதாக கூறப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.