திமுகவும், திராவிட மாடல் ஆட்சியும் ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திராவிட மாடல் அரசு, திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கிறது.

வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள். அவர் தொடங்கிய தருமசாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள், ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதைப் பார்த்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை சிலர் சொல்லி வரக்கூடி அவதூறுக்கு பதில் சொல்லக்கூடிய விழாதான் இந்த விழா. திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது. திராவிட மாடல் ஆட்சியானது நம்பிக்கைகளுக்கு எதிரானது. இவ்வாறு மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள்.

மீண்டும் இதை குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால், முன்னாடி சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு, பின்னாடி சொன்னதை வெட்டிட்டு சில சமூக ஊடகங்கள் வெளியிடும். அதனால், முன்கூட்டியே அதை உங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியென்பது ஆன்மிகத்துக்கு எதிரானது. திராவிட மாடல் ஆட்சியானது நம்பிக்கைகளுக்கு எதிரானது. இதைமட்டும் பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின், இப்படி பேசினார் என்று வெட்டி, ஒட்டி பின்னாடி பேசியதை வெட்டிவிடுவர். மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள் என்பதை வெட்டிவிட்டு பதிவு செய்துவிடுவர். அதற்கென்று சில சமூக ஊடகங்கள் உள்ளது.

நான் தெளிவோடு சொல்ல விரும்புவது, ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லையென்று, பிற்போக்குத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் மண்தான் இந்த தமிழ்மண்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.