சில்கெட்,
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 113 ரன் இலக்கை வங்காளதேச அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து ‘திரில்’ வெற்றியை ருசித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் யுஏஇ மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. யுஏஇ அணி கடந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வி அடைந்தது. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.