முதல்வர் அதிரடி.. மீண்டு வந்த தமிழர்கள்; மக்கள் வரவேற்பு!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முகவர்களை பயன்படுத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து மியான்மருக்கு அழைத்து சென்று அங்கு டிஜிட்டல் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க உதவுமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர்

கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், சட்ட விரோதமாக எல்லை கடந்ததாக தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரங்கள் முதலாவதாக, மியாவாடி பகுதியில் இருந்து 32 இந்தியர்களை மீட்டு உள்ளனர். இதில், 13 தமிழர்கள் இன்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.

மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழர்கள் மியான்மரில் நடந்த கொடுமைகளை கண்ணீருடன் விவரித்து உள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பித்துச்செல்ல முயன்றால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருவதாகவும் பகீர் தகவலை கூறியுள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை சமீபத்தில் கூட அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதாவது தாய்லாந்தில் அதிக சம்பளத்தில் டேட்டா எண்டரி வேலை என்று சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தது.

இவ்வாறு செல்லும் இளைஞர்கள் சட்டவிரோதமாக மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு பல்வேறு வகையான மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுவதால், அங்கு வேலைக்கு செல்வது ஆபத்தானது என, குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.