மெகபூபா முப்தி முன்வைத்த வீட்டுக் காவல் குற்றச்சாட்டு – ‘சுதந்திரமாக பயணிக்கலாம்’ என ஸ்ரீநகர் போலீசார் விளக்கம்  

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காஷ்மீர் வருகையின் காரணமாக, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீநகர் போலீசார், ‘நீங்கள் சுதந்திரமாக எங்கும் செல்லலாம்’ என்று பதிலளித்துள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது வீட்டின் கதவுகளில் பூட்டு போடப்பட்டிருக்கும் படம் ஒன்றினைப் பதிவிட்டு, “காஷ்மீரில் தான் செல்லும் இடமெல்லாம் அமைதி திரும்பி விட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்து வரும் நிலையில், என்னுடைய பணியாளர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக பாட்டன் செல்ல விரும்பிய நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். முன்னாள் முதல்வரான எனது அடிப்படை உரிமைகளே எளிதாக மறுக்கப்பட்டுள்ளது என்றால் சாமானியர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்” என்று தெரிவித்திருந்தார். மேலும், தனது பதிவில் உள்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் லெப்டினெட் ஜெனரலையும் டேக் செய்திருந்தார்.

மெகபூபாவின் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள ஸ்ரீநகர் போலீசார் அவருக்கு பதில் அளித்துள்ளது. ஸ்ரீநகர் போலீசாரின் ட்விட்டர் பக்கத்தில், “பாட்டனுக்கு பயணம் செய்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அவர் மதியம் 1 மணிக்கு பாட்டன் செல்வார் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பதிவிட்டுள்ள படம் அந்த பங்களாவில் வசிப்பவர்கள் உள்பக்கமாக போட்டுள்ள சொந்தப் பூட்டு. அங்கு எந்தப் பூட்டும் தடையும் இல்லை. அவர் சுதந்திரமாக பயணிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் இந்தப் பதிவிற்கு மெகபூபா ட்விட்டரில் மீண்டும் பதில் அளித்துள்ளார். அதில், ” நேற்றிரவு எனக்கு பாட்டனுக்கு செல்ல அனுமதி இல்லை என்று பாரமுல்லா எஸ்பி-யால் தெரிவிக்கப்பட்டது. இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் அவர்களாவே எனது வீட்டு கேட்டை உள்ளே இருந்து பூட்டிவிட்டு, தற்போது வீட்டில் இருப்பவர்கள் பூட்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களின் தவறுகளை மறைக்க முயல்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் போலீசார் இதற்கும் பதில் அளித்துள்ளனர். அதில், “நீங்கள் பயணம் செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். அதிகாரபூர்வ செய்தி காஷ்மீர் காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக ஏற்கெனவே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வெளியே செல்ல திட்டமிடுவதற்கு முன்பு பாதுகாப்பு தொடர்பாக இப்படி சின்ன சின்ன விஷயங்கள் நடைபெறுவது வழக்கம் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நீங்கள் வெளியே செல்ல விரும்பவில்லை என்றால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்யமுடியாது மேடம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை ராஜோரியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு காஷ்மீரின் ஆட்சி மூன்று குடும்பங்களின் கைகளில் இருந்தது. தற்போது அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இன்று பாரமுல்லாவில் பெரிய பேரணி ஒன்றில் அமித் ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.