நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 1991-1996 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சி மற்றும் ஆட்சி ரீதியில் பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த பங்களாவில் இருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொடநாடு எஸ்டேட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தின்போது, கொடநாடு எஸ்டேட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மட்டும் இல்லாமல் முக்கிய ஆவணங்களும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என, போலீஸ் சந்தேகித்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் என்பவர் சேலம் அருகில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
அதேப்போல் மற்றொருவரான சயான் என்பவர் சென்ற கார் கேரளாவில் விபத்துக்கு உள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார்.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் யாரும் எதிர்பாராத விதமாக, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சினிமாவை ஓவர்டேக் செய்யும் த்ரில் நிறைந்த இந்த கொலை, கொள்ளை வழக்கு தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தபோதிலும் கிணற்றில் போட்ட கல்லாகவே இதுநாள் வரை இருந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் சிபிசிஐடிக்கு இந்த வழக்கு பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
கொட நாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என்று, திமுக கருதுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடநாடு வழக்கு தோண்டி எடுக்கப்படும் என கூறி இருந்தார்.
அதன்படியே திமுக ஆட்சி அமைந்ததும் சயானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கின் அனைத்து குற்றமும் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டளைப்படியே நடந்ததாக சயான் வாக்குமூலம் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் பலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை எடப்பாடி பழனிச்சாமிக்கும் நகலாக வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சிபிசிஐடியில் டிஜிபியாக ஷகில் அத்தர் உள்ளார். இவரும் இந்த மாதம் ஓய்வு பெறுவதால் அவரை காட்டிலும் பெரிய அதிகாரிகள் சிபிசிஐடியில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், வெளி உலகத்துக்கு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடு பிடிப்பதாக காணப்பட்டாலும் வீரியம் இல்லாத தமிழக அரசின் நகர்வு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக மாறும் என ஆதரவாளர்கள் கூறுவதால் அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சி களைகட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.