சமீபத்தில் வெளியாகியுள்ள மத்திய அரசு அறிக்கை ஒன்று, பெண் மற்றும் ஆண் சிசுக்கள் இறப்பு விகிதமானது சமன்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஐ.எம்.ஆர். (IMR – Infant Mortality Rate) என்பது ஒவ்வோர் ஆண்டும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 பேரில் எத்தனை பேர் உயிரிழக்க நேரிடுகிறது என்பதை கணக்கிடும் வழிமுறையாகும். இதன்மூலம் பிரசவ கால இறப்புகள் மற்றும் சிறார் உயிரிழப்பு எண்ணிக்கை ஆகியவை கண்காணிக்கப்படும். இந்திய அளவில், ஐ.எம்.ஆர். விகிதம் (ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு) குறித்த 2020 அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அது கணிசமாகக் குறைந்திருக்கிறது.
ஆண் சிசு மரணங்கள் மற்றும் பெண் சிசு மரணங்கள் என இரண்டுமே இந்திய அளவில் குறைந்திருக்கின்றன என அந்த முடிவு தெரிவிக்கிறது. 2020-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கில் இந்தியாவின் மொத்த இறப்பு விகிதத்தில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 9.1% ஆக இருந்தது தெரிய வந்துள்ளது.
ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த ஐ.எம்.ஆர், 2008 -10 ஆண்டு காலகட்டத்தில் 50.3 என்றும், 2018-20 காலகட்டத்தில் அது 30.1 ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் நல கணக்கீட்டின்படி எடுக்கப்பட்ட சர்வேயில், 2019-21ம் ஆண்டின் ஐ.எம்.ஆர் 35.2 என்பது குறிப்பிடத்தக்கது.

2008 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதென்பது, நாட்டில் சமூக – பொருளாதார – மருத்துவ நிலைகள் உயர்ந்திருப்பதை காட்டுவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2008 மற்றும் 2020-ம் ஆண்டு என ஆய்வு நடந்த இரு காலகட்டங்களிலும், இந்திய அளவில் மத்திய பிரதேசத்தில்தான் (ஐ.எம்.ஆர் 66.5 மற்றும் 45.9 ) அதிக இறப்பு நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் (2018-20 க்கு உட்பட்ட ஆண்டுகளில் 40.6 ஆக) உள்ளது.
குறைவான சிசு இறப்புகள் என்று பார்த்தால், அது கேரளாவில் உள்ளது. கேரளாவின் இந்த நிலை, 2008-10 ஆண்டு சர்வேயிலும் இப்படியே தான் குறைவாக இருந்திருக்கிறது. கேரளாவில் சுகாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதே அதற்குக் காரணம். தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2008-10ம் ஆண்டுகளில் ஐ.எம். ஆர் 27.7 என்றும், 2018-20ம் ஆண்டுகளில் 14.1 என்றும் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் சிசு இறப்புகள் 49.1% வரை தமிழ்நாட்டில் குறைந்திருக்கின்றன.
2008 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கு இடையில், நாடு முழுவதும் பெண் மற்றும் ஆண் குழந்தை இறப்பு விகிதம் சமமாகிவிட்டது என்பதையும் இந்த அறிக்கை காட்டியுள்ளது. இது பெண் சிசுக்கொலை மற்றும் பெண் சிசு மரணங்கள் குறைந்திருப்பதையே காட்டுகின்றது.

சொல்லப்போனால், 2018 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில், சில மாநிலங்களில் பெண் சிசுக்கள் இறப்பு எண்ணிக்கையானது ஆண் சிசுக்கள் இறப்பைவிடக் குறைவாக இருந்தது. ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், பெண் சிசுக்கள் இறப்பு எண்ணிக்கையும் ஆண் சிசுக்கள் இறப்பு எண்ணிக்கையும் சமமாக இருந்துள்ளது.
மற்ற எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பெண் சிசுக்களின் இறப்பு எண்ணிக்கை, ஆண் சிசுக்களின் இறப்பு எண்ணிக்கையைவிடக் குறைவாக இருந்துள்ளது. மேலும் இந்தியாவின் 11 பெரிய மாநிலங்களில், ஆண் சிசுக்களின் இறப்பு எண்ணிக்கையை, பெண் சிசுக்களின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பெண் சிசுக்களின் இறப்பு குறைவாக இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
– இன்பென்ட் ஷீலா