“சமூக சீர்திருத்தங்களுக்கு பெரியார் மட்டும் காரணமில்லை…” – சொல்கிறார் வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு, பி.எஃப்.ஐ அமைப்புமீது மத்திய அரசின் தடை, தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… என பா.ஜ.க-வைச் சுற்றிப் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனை அவரின் இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

“திருமாவளவன், ஆ.ராசா சனாதனத்தைக் கொண்டு பெண்களைத் தவறாகப் பேசுகிறார்கள்’ என்று குற்றச்சாட்டு முன் வைக்கும் பா.ஜ.க-வினர், அண்ணாமலை பெரியார் சொன்னாதாக சொல்லி கூறியிருக்கும் கருத்தை ஏற்கிறதா? அதிலும் பெண்களை தவறாகத்தானே சித்திரித்திருக்கிறது?”

“மக்களிடம் பெரியார் ஒரு கருத்து சொன்னதாக இவர்கள் சொல்கிறார்கள். அதே பெரியார் உங்களுக்கும் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டாமா. தங்களுக்கு ஆதரவான கருத்தை மட்டும் அவர்கள் எடுத்து சொல்வது எந்த விதத்தில் நியாயம். கருத்துக்கு எதிர் கருத்து இருக்கத்தான் செய்யும். எனவே ஆ.ராசாவுக்கான பதிலை அண்ணாமலை சொல்லவில்லை. பெரியாரின் பதிலைத்தான் எடுத்து சொல்லி இருக்கிறார்”

திருமாவளவன்

“பிரதமர் போல், உங்கள் மாநில தலைவரும் இப்போது அடிக்கடி டூர் போகிறாரே? அதுவும் இப்போது இருக்கும் நெருக்கடியான நேரத்தில் தேவையா என்று உங்கள் கட்சியினரே விமர்சிக்கிறார்களே…?”

“டூர் போவதுதான் தலைவரின் வேலை. தலைவர் இல்லை என்றால், முற்றிலும் முடங்கி விடும் என்று எப்படி எடுத்து கொள்ள முடியும். அதற்கான செட்டப், சிஸ்டம் இருக்கிறது. எல்லாம் பார்த்துக் கொள்வதற்கான ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணாமலை உயர் கல்விக்காக அமெரிக்க சென்றிருக்கிறார். ஒரு தலைவர் தன் திறமையை வளர்த்து கொள்வதற்காகப் போவது ஒன்றும் தவறில்லையே. சர்வதேச அளவில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு வந்தால், நாளை தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது என்று நாங்கள் பார்க்கிறோம்”

மோடி, அண்ணாமலை, எல்.முருகன்

“பி.எஃப்.ஐ- அமைப்பை தடை செய்வதற்கான காரணங்களும், அரசு சொல்லும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களும் இல்லை என்று அவர்கள் மறுக்கிறார்களே?”

“ஆதாரம் இல்லாமல் ஒரு தனிப்பட்ட அமைப்பை தடை செய்ய முடியாது. மத்திய அரசு ஒரு அமைப்பை தடை செய்கிறது என்றால் நிச்சயமாக நீதிமன்றம் அவர்கள் செல்வார்கள். எனவே சில விவகாரங்களில் நீதிமன்றத்தில் வழக்கு போகும் போது அந்த நேரத்தில் உகந்த ஆதாரங்கள் கொடுப்பார்கள். அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூட்டுவதற்கான உரிமை என அடிப்படை உரிமைகள் இருக்கிறது. ஆனால், அது அனைத்துக்கும் சரியான காரணம் தேவை. தேசத்தின் பாதுகாப்பிற்கு எதிராக அந்த அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தால் நிச்சயமாக அதற்குப் பதில் சொல்லி தானே ஆகணும்.”

“பி.எஃப்.ஐ தடை செய்ய ஆயுதங்கள் வைத்திருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே ஆயுதத்தை வைத்து பூஜை செய்திருந்தார்கள் இந்து அமைப்பினர். அவர்களையும் தடை செய்யலாம் இல்லையா?”

“துப்பாக்கி பயன்படுத்தி பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்கும், ஆயுத பூஜையின் போது வீட்டில் வைத்து பூஜை செய்வதற்கும் வித்தியாசம் இல்லையா. துப்பாக்கி அவர்கள் பாதுகாப்புக்காக அரசு கொடுத்திருக்கிறது. லைசன்ஸ் வாங்கி யாருமே துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். அதில் என்ன பிரச்னை”

தமிழிசை சௌந்தரராஜன்

“ஆளுநர் அரசியல் சார்பற்றவர்கள். ஆனால் அவர்களை விமர்சிக்கும் போது ஏன் பா.ஜ.க-வினர் அதிக எதிர்வினை ஆற்றுகிறீர்கள்?”

“ஆளுநர்கள் அரசில் சார்பற்றவர்களாக இருந்தாலும் அவர்களோடு நாங்கள் இத்தனை நாள் பயணித்திருக்கிறோம். அவர்கள் பற்றி தவறான கருத்து வரும் போது அதற்குத் தனிப்பட்ட முறையில் எதிர்வினை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது. பா.ஜ.க-வில் இருப்பதால் டாக்டர். தமிழிசை பற்றி சொல்லும் போது அமைதியாக இருக்க முடியாது. அது அரசியல் இல்லை. டாக்டர் தமிழிசை இடத்தில் யார் இருந்தாலும் எதிர்வினை ஆற்றுவோம்”

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சொல்லி வருகிறீர்களே?”

“மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறார்கள், அணுகுகிறார்கள் என்பதை வைத்து சொல்கிறோம். ஆட்சியை சரியா நடத்துங்கள். லஞ்சம் ஊழல் எங்கும் பரவி இருக்கிறது. மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. கூடவே சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் இருக்கிறது என்பதை ஆரோக்கியமாக சுட்டி காட்டி, இப்படியே சென்றால் மக்களின் அதிருப்தி பெற்று சட்டமன்ற தேர்தலும் வந்துவிடும் என்று ஓர் அக்கரையில் சொல்கிறோம்”

பெரியார்

“விதவைகள் மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை ஒழிப்பு, வெள்ளை சேலை ஒழித்தது போன்ற விஷயங்களில் பெரியாரின் பங்கை ஒரு பெண்ணாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

“சமூக சீர்திருத்தங்களில் பெரியாரின் பங்கை மறுதலிக்கவில்லை. அதேநேரத்தில் விதவை மறுமணம் சாரதா சட்டத்தின் மூலம் ராஜராம் மோகன் ராய் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. வெள்ளை புடவை உடுத்துவது என்பது அந்த பெண்களின் பண்பாட்டு வழியில் வந்தது. அதன் பின் அதற்கான சுதந்திரமும் கிடைத்தது. மறுமணம் வரவேற்கிறோம். இது போன்ற சீர்திருத்தங்களுக்குப் பெரியார் மட்டுமே காரணம் என்பதை மறுக்கிறோம். சமூக நீதி பேசுவது பெரியார் காலத்தில் வரவில்லை. அதற்கு முன் ராமானுஜர் காலத்திலேயே இருக்கிறது. பாரதியார் தன் கூட இருப்பவருக்கு பூநூல் போட்டு சமமாக உட்கார வைத்தார்.

இந்த மாதிரி எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கோயில் நுழைவு போராட்டம் கூட காங்கிரஸாரும், ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அதிகளவு முன்னெடுத்திருப்பதாக சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே சீர்திருத்தங்கள் நடந்த போது பெரியாரும் பங்காற்றியிருக்கிறார். அவர் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் ஒன்றுமில்லை என்கிற விஷயத்தை மறுதலிக்கிறோம். மற்ற மாநிலங்களுக்குப் போகும்போது அவர்கள் எல்லாம் தங்கள் பெயருக்குப் பின் சாதி பெயரை வைத்துக் கொள்கிறார்கள். அந்த நேரங்களில் ‘நான் தமிழ் நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் ஊரில் பெயரோடு சாதி இணைத்துக் கொள்வதில்லை’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வதற்குப் பெரியாரும் பங்காற்றி இருக்கிறார்.”

பொன்னியின் செல்வன்

“பொன்னியின் செல்வன் எப்படி..?”

“தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் பெரும் கனவு. வானதி என்பது, கல்கியினுடைய ‘பொன்னியின் செல்வன்’-ல் வரும் கதாபாத்திரம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. கல்கியின் இலக்கிய நடையால் எத்தனை பேரை வசீகரித்திருக்கிறார். அதில் நானும் ஒருத்தி. சிவன் வழிபாடு, சோழர்களின் கடல்கடந்து ஆட்சி செய்த பெருமை என இன்றைக்கு இருக்கக் கூடிய இளைஞர்களுக்குத் தமிழ்நாட்டின் பாரம்பரியம் எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது பொன்னியின் செல்வன். இதுதான் இந்த மண்ணின் தன்மை. இந்த மண்ணிற்கு இருக்கும் அடையாளமும் இதுதான். இத்தைதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் படத்தில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.