தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

டெல்லி: தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள மத்தியஅரசு, அவர்கள்மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10பேரை மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) பயங்கரவாதிகளாக அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,  ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்தவருமான ஜாபர் இக்பால் என்ற சலிம், புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப், ஸ்ரீநகரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பிலால் அகமது பெய்க் என்ற பாபர், பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான், தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ், குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ், பாரமுல்லா பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி ஆகிய 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஹபிபுல்லா மாலிக், பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவர். காஷ்மீரில் டிரோன் மூலம் ஆயுதங்கள் போடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர். இவர் காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பசிட் அகமது ரேஷி, காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொடுத்தவர். இம்தியாஸ் அகமது கான்டூ, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்தவர். பல தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர். ஜாபர் இக்பால், காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவலில் தொடர்புடையவர். மற்ற 6 பேரும் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.