பாட்னா: “பிஹார் முதல்வர் பதவியையே விட்டுக்கொடுத்தாலும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாருக்காக வேலைசெய்ய மாட்டேன்” என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐபேக் நிறுவனரும், அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பிஹாரில் “ஜன் சூரஜ்” என்ற 3,500 கிமீ தூர யாத்திரையைத் தொடங்கியுள்ளார். மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் ஜமுனியா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் புதன்கிழமை பிரசாந்த் கிஷோர் பேசினார்.
அப்போது அவர், “சில நாட்களுக்கு முன்பு நான் நிதிஷ்குமாரை சந்தித்த போது அவர் என்னை மீண்டும் ஐக்கிய ஜனதாதளத்தில் வந்து சேர்ந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நீ என் அரசியல் வாரிசு. ஜன் சூரஜ் யாத்திரையை கைவிட்டுவிட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு நான், அவர் (நிதிஷ் குமார்) என்னை அவரது அரசியல் வாரிசாக அறிவித்தாலும், முதல்வர் பதவியை எனக்காக விட்டுக்கொடுத்தாலும் இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன். நான் மக்களுக்கு ஒரு உறுதி கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து மாற முடியாது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பிஹாரில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது ஜன் சூரஜ் யாத்திரையை பிரஷாந்த் கிஷோர் தொடங்கினார். இந்த யாத்திரையின் போது அடிக்கடி நிதிஷ் குமாரின் பெயரை குறிப்பிட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டமொன்றில் பேசிய அவர், “கடந்த 10- 15 நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் என்னை அழைத்துப் பேசினார் என்பதை ஊடக செய்திகளின் வழியாக அறிந்திருப்பீர்கள். அப்போது அவர் என்னை ஐக்கிய ஜனதாதளம் கட்சியினை வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னர் டெல்லியில் என்னை சந்தித்த நிதிஷ் குமார். என்னிடம் மன்றாடி உதவி கேட்டார். நான் அவரை மகா பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக 2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற உதவினேன்.இன்று எனக்கு அறிவுரை வழங்குகிறார்” என்றார்
சமீபத்தில், பிரசாந்த் கிஷோர் பாஜகவிற்காக வேலை செய்வதாக குற்றம் சாட்டியிருந்த நிதிஷ் குமார், கிஷோரின் யாத்திரைக்கு நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த பிரசாந்த் கிஷோர், “தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது குறித்து நீண்ட காலமாக அரசியல்வாதிகள் என்னிடம் அறிவுரை கேட்டுவருகின்றனர். அரசியல் வியூக வகுப்பாளராக என்னுடைய சாதனைகளைப் பற்றி ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. ஆனால் நான் யாரிடமும் இதற்கு முன்பு எனக்காக பணம் கேட்டது இல்லை. ஆனால் இன்று நான் நன்கொடை வேண்டுகிறேன். இதுதான் இந்த இயக்கத்தை கட்டுவதற்காக நான் வாங்கும் கூலி. இங்கு இருக்கும் பந்தல் உட்பட அப்படி பெறப்பட்டது தான்” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக செயல்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சித் தலைவர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.