மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் தலைநகர் காந்திநகர் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று காலையில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்ததால், அவற்றின் மீது மோதியதில் ரயிலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ரயில்வே துறையின் செய்தித்தொடர்பாளர்,”மூன்று – நான்கு எருமை மாடுகள் திடீரென மும்பை – காந்திநகர் வந்தே பாரத் ரயிலின் குறுக்கே வந்தன. ஃபைபர், பிளாஸ்டிக்கால் ஆன முகப்பு பகுதி மட்டும் சிறிது சேதமடைந்தது. மற்றபடி ரயிலுக்கு வேறெந்த பிரச்சனையும் இல்லை.
Less than a week after it’s inauguration Vande Bharat train damaged in #Gujarat today morning.
Its just few days Modi inaugurated this train.#GujaratElections2022 pic.twitter.com/kbUGke2DxV
— FinalWarAgainstCorruption (@FWACorruption) October 6, 2022
மாடுகள் மீது மோதிய எட்டாவது நிமிடமே ரயில் புறப்பட்டுவிட்டது. குறித்த நேரத்தில் காந்திநகரையும் அடைந்துவிட்டது. குஜராத்தின் கைரத்பூர்-வத்வா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மாடுகளை தனித்துவிட வேண்டாம் என அப்பகுதி கிராம மக்களுக்கு ரயில்வே துறை சார்பில் அறிவுரை கூறப்பட்டுள்ளது” என்றார். மேலும், ரயில் மோதிய எருமை மாடுகள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையே செல்லும் இந்த அதிவேக அதிவிரைவு ரயில், கடந்த செப். 30ஆம் தேதி பிரதமர் மோடியால் குஜராத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்களில், இது மூன்றாவது வழித்தடமாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று மொத்தம் 75 ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் உட்சபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ., என்றும், 52 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை அதனால் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலால் வேகத்தை சீராக குறைக்கவும் முடியும் அதிகரிக்கவும் முடியும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறைகிறது. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான ரயில்களில் செல்ல எட்டு மணிநேரமாகும். ஆனால், வந்தே பாரத் ரயில், சென்னை – மதுரை செல்லும் மற்ற அனைத்து ரயில்களையும் விட 40-50% (சுமார் 4 மணிநேரம்) விரைவாக சென்றுவிடும்.