அமெரிக்காவில் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பம் படுகொலை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்காவில் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது; அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த டாக்டர் ரந்தீர் சிங் – கிரிபால் கவுல் தம்பதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் சமீபத்தில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக இந்தியா வந்துள்ளனர்.

உடல்கள் மீட்பு

இவர்களுடைய மகன்கள் அமன்தீப் சிங், 39, ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி ஆகியோரை, மர்ம நபர் ஒருவர் சமீபத்தில் கடத்தியுள்ளார். அதே நேரத்தில் அமன்தீப் சிங்கின் மனைவி ஜஸ்பிரீத் கவுர் வீட்டில் இல்லாததால் அவர் தப்பியுள்ளார்.இந்தக் குடும்பத்துக்கு சொந்தமான கார் ஒன்று, அருகே உள்ள பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் நால்வரும் கடத்தப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.இந்தக் குடும்பத்தினரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, ஒரு இடத்தில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ‘சிசிடிவி கேமரா’ தகவல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கடத்தியதாக கருதப்படும் ஒருவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.போலீசாரிடம் இருந்து தப்பிய அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருடைய பெயர் ஜீசஸ் மேனுவல் சால்கோடா என்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், மெர்செட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில், எட்டு மாதக் குழந்தை உட்பட நால்வரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டன.இந்தக் குடும்பத்தினர் சமீபத்தில் தான், ‘டிரக்’ இயக்கும் தொழிலை துவக்கியுள்ளனர். அதனால், தொழில் போட்டியில் இந்தக் கொலை நடந்ததா என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இனவெறி தாக்குதல்

இவர்களுடைய வீட்டில் இருந்து நால்வரும் கடத்தி செல்லப்பட்டது தொடர்பான புதிய, ‘வீடியோ’ காட்சியை போலீசார் நேற்று வெளியிட்டனர். அதே நேரத்தில் வீட்டில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை.இந்த கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துக்கு அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீது தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசையும், அமெரிக்க அரசையும் இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் கண்டனம்

பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை வலியுறுத்தும்படி, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோரும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் கொலை

அமெரிக்காவின் இன்டியானாபோலிசில் உள்ள பல்கலையில் படித்து வந்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய வருண் மணீஷ் செட்டா, 20, என்ற மாணவர், தன் விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய உடலில் பல இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, அவருடைய அறையில் வசிக்கும் கொரியாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர், போலீஸ் அவசர உதவி எண்ணை அழைத்து, தன் அறை நண்பர் இறந்து கிடப்பதாக தெரிவித்திருந்தார். எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.