என்னது… திருப்பதி லட்டு வாங்க இவ்ளோ கூட்டமா? கி.மீ கணக்கில் நீளும் வரிசை!

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா? அப்படியெனில் இதைப் படித்து விட்டு பிளான் போட்டால் நன்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு திருமலையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் புரட்டாசி சனிக்கிழமை. நாளைய தினம் நடப்பு தமிழ் மாதமான புரட்டாசியின் 3வது சனிக்கிழமை வருகிறது. இதையொட்டி ஏழுமலையான் பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புவர்.

இந்நிலையில் தான் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தரிசனத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 5 கிலோமீட்டரை தாண்டி வரிசை சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காத்திருந்து செல்வதால் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கும் மேல் ஆவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

எனவே திருப்பதி புறப்படுவதற்கு முன்பாக சரியாக திட்டமிட்டுக் கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது திருமலை மற்றும் திருப்பதியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தங்கும் அறைகள் கிடைக்காமல் நேரடியாக தரிசன வரிசையில் போய் நின்று விடும் சூழல் நிலவுகிறது.

இரவு, பகல் பாராமல் வரிசை சென்று கொண்டிருப்பதால் குளிரில் நடுங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதவிர மொட்டை அடிக்கும் இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பலரும் மொட்டை அடிப்பதா? இல்லை தரிசன வரிசைக்கு சென்றுவிடலாமா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். முக்கியமாக திருப்பதி லட்டை மறந்து விட்டோமே.

திருப்பதிக்கு போய் ஏழுமலையானை தரிசித்து விட்டு வந்தால் தரிசனம் நன்றாக கிடைத்ததா? என்ற கேள்வியை விட லட்டு எங்கே? என்பது தான் பிரதானமாக முன்வந்து நிற்கிறது. தற்போது திருப்பதி லட்டு வாங்கும் கவுண்ட்டர்களும் கூட்ட நெரிசலில் தத்தளித்து கொண்டிருக்கிறதாம்.

எனவே திருப்பதி பிளானில் பக்தர்கள் சரியாக முடிவெடுத்து செயல்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் வரிசையில் நிற்கும் பக்தர்களை நேரில் பார்த்து குறைகளை கேட்டறிய வருகை புரிந்தார் தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமையிலான குழுவினர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.