இந்தாண்டு மே மாதத்தில் டெல்லிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னர்(எல்.ஜி) வி.கே.சக்சேனாவுக்கும், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதிலும் சமீபத்தில், மாநிலத்தின் புதிய கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, ஆளுங்கட்சி அமைச்சர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்குமாறு வி.கே.சக்சேனா உத்தரவிட்டது ஆளுங்கட்சியிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் மணீஷ் சிசோடியாவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதையடுத்து, ரூ.1,400 கோடி கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக வி.கே.சக்சேனாமீது குற்றச்சாட்டை முன்வைத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் விடிய விடியப் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வி.கே.சக்சேனாவை பொறுமையாக இருக்கும்படி கிண்டல் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தியில் பதிவிடப்பட்டிருந்த அந்த ட்வீட்டில், “எல்.ஜி சாஹிப் என்னைத் தினமும் திட்டும் அளவுக்கு, என் மனைவிகூட என்னைத் திட்டுவதில்லை. கடந்த ஆறு மாதங்களில், எல்.ஜி. சாஹிப் எனக்கு எழுதிய அளவுக்கு, என் மனைவிகூட எனக்குக் காதல் கடிதங்கள் எழுதியதில்லை. எல்.ஜி சாஹிப், கொஞ்சம் அமைதியடையுங்கள். மேலும் உங்கள் சூப்பர் முதலாளியிடமும்(மத்திய அரசு) சொல்லுங்கள். அதோடு கொஞ்சம் நிதானமாகவும் இருங்கள்” என்று கெஜ்ரிவால் கிண்டலாகக் கூறியிருந்தார்.
முன்னதாக திங்களன்று, மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் ராஜ்காட், விஜய் காட் ஆகிய இடங்களில் நடைபெற்ற, அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ளாததால், கடமைகள் மற்றும் பொறுப்புகளை தவறவிட்டதாக வி.கே.சக்சேனா கெஜ்ரிவாலுக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.