'ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி'… ராகுலுக்கு தேர்தல் ஆணையம் செக்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் சிலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரசில் இவர்களை உதாரணமாக சொல்லலாம்.

இவர்களை போன்று 2014 எம்பி தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.

இப்படி ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய நேரிடுகிறது. இதன் விளைவாக காலியாகும் குறிப்பிட்ட தொகுதியில் 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டி வருகிறது.

இதனால் தேவையற்ற பொருட் செலவு ஏற்படுவதால், இதனை தவிர்க்கும் பொருட்டு இனி ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் விதத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மததிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு வேட்பாளர் மூன்று தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்றிருந்தது, 1996 இல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்படியாக குறைக்கப்பட்டது. இதுவும் தற்போது ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும்படி, சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஆணையத்தின் இந்த பரிந்துரை ஒருபுறம் பொதுவானதாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல காந்திக்கு வைக்கப்படும் செக்காகவே கருதப்படுகிறது.

காரணம், இவர்தான் 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அவர் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில்தான் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி என்று தேர்தல் ஆணையம் பேச தொடங்கி உள்ளதாகவும் அரசியல் அரங்கில் கருத்து எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.