தாஜா செய்யும் ஜனாதிபதி இந்தியாவுக்கு வேண்டாம்: காங். முன்னாள் எம்பி சர்ச்சை

புதுடெல்லி: ‘முர்முவை போல் ஜால்ரா தட்டும் ஜனாதிபதி, எந்த நாட்டுக்கும் கிடைக்கக் கூடாது,’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில்  80 சதவீதம் குஜராத்தில் செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த உப்பை சாப்பிடுகின்றனர்,’ என்றார். இதை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதியின் பேச்சு, பாஜ.வை தாஜா செய்வது போல் உள்ளது. எந்த நாட்டுக்கும் முர்மு போன்ற ஜனாதிபதி கிடைக்கக் கூடாது,’ என்று கூறியுள்ளார். இது, பெரும் சர்ச்சையாகி உள்ளது.  

பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறுகையில், ‘ஜனாதிபதிக்கு எதிராக காங்கிரஸ்  தலைவர்கள்  தொடர்ந்து கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இது, அக்கட்சியின் பழங்குடியின விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என்றார். பாஜ.வின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ஷெசாட் பூனாவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதியை தாஜா செய்பவர் என்று விமர்சித்துள்ள உதித் ராஜை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தி உள்ளார்.

* முர்முவை பற்றி கூறிய கருத்து குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, உதித் ராஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.