மூணாறில் 10 பசுக்களை கொன்ற புலி பிடிபட்டது எப்படி?

கேரளா மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே கே.டி.எச்.பி நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் ஒரு கன்றுக்குட்டி உள்பட 5 பசுக்களை கடித்து கொன்றது. இதனால் கோதைமேடு, ராஜமலை, இரவிகுளம், நேஷனல் பார்க் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாட பணிகளுக்கு கூடி வெளியே வர அஞ்சினர் வீட்டிற்குள் முடங்கினர்.

புலி

வனத்துறையினர் புலியை தொடர்ச்சியாக கண்காணித்து பிடிக்க முயன்றனர். இறந்த மாடுகளை தொழுவத்திலும், தொழுவத்துக்கு வரும் பகுதியில் போட்டு புலி மீண்டும் வந்தால் பிடித்துவிடலாம் எனக் காத்திருந்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட புலியோ அதேபகுதியில் உள்ள மற்றொரு தொழுவத்திற்கு சென்று  ஒரு கன்று உள்பட 4 பசுக்களை கடித்து கொன்றுவிட்டு தப்பிவிட்டது. மொத்தம் 2 கன்றுகள் உள்பட 10 மாடுகள் பலியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதனால் வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையுடன் இணைந்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனஉயிரின ஆர்வலர் செந்தில்குமாரிடம் பேசினோம். ”தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி 6 குழுக்கள் புலியை பிடிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கூண்டின் ஒருபுறம் உயிருடன் இருக்கும் கால்நடையை வைத்து மறுபுறம் புலி வருவது போன்ற ஏற்பாட்டை செய்தோம். ஏற்கெனவே புலி வந்த தொழு பகுதியில் 2 கூண்டுகளை வைத்தோம். இந்தப் புலி ஏற்கெனவே தனது புத்திசாலி தனத்தை காட்டி வேறொரு தொழுவுக்கு சென்றது போல மீண்டும் செல்லக்கூடும் என எண்ணிணோம்.

செந்தில்குமார்

அதனால் 3 ஆவது கூண்டை கடலாறு என்ற பகுதியில் வைத்தோம். ஏனென்றால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புலி நடமாட்டத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார். மூன்று கூண்டுகளை ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தோம். எதிர்பார்த்தது போலவே புலி கடலாறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிக் கொண்டது. தொடர்ச்சியாக ஆக்ரோஸத்துடன் இருந்த புலியை ஒருவாறு சாந்தமானவுடன் கால்நடை மருத்துவக் குழு மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் 9 வயதான புலி மிகவும் பலமாக இருந்ததும், தற்காலிகமான கண்புரை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

பொதுவாக காட்டில் வாழும் புலிகள் வெளியேறுவது இல்லை. பலமான புலிகள் வனஉயிர்களை வேட்டையாடி சாப்பிட தான் விரும்பும். தான் பலவீனமடையும் போது தான் காட்டை விட்டு வெளியேறி கால்நடைகளை தாக்கும். காட்டைவிட்டு வெளியேறி மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளை தாக்கினால், அந்த புலிக்கு வயது மூப்பு ஏற்பட்டிருக்கும் அல்லது நோய் ஏற்பட்டிருக்கும். இதுமட்டுமில்லாது புலிகள் இடப்பெயர்வின் போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பிடிபட்ட புலி

இந்தப் புலி மிகவும் பலமாக இருந்தபோதிலும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அதனால் காட்டில் வேட்டையாட முடியாத நிலை இருந்திருக்கலாம். அதனால் தொழுவில் உள்ள பசுக்களை குறிவைத்து தாக்கியுள்ளது. பசுக்கள் கயிறால் கட்டி வைக்கப்பட்டிருந்து இருக்கிறது. ஒரு மாட்டை கடித்தால் மற்ற மாடுகள் அனைத்தும் அலறி கத்தியிருக்கும் இதனால் புலி ஒரு மாட்டை கடித்து இழுத்துச் செல்ல முடியாமல் அடுத்தடுத்த மாடுகளை கடித்து கொன்றுள்ளது. 

தற்போது கண் பாதிப்புக்கான சிகிச்சையை கால்நடை மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். முழுமையான சரியானதும் அந்தப் புலியை தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் காட்டில் விடுவது குறித்து வனத்துறை மற்றும் வனஉயிரின ஆர்வலர் உள்ளிட்டோர் சேர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிவித்து முடிவெடுப்பர் ”என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.