புதுடில்லி :உலக பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை, மீண்டும் குறைத்து அறிவித்துள்ளது, பன்னாட்டு நிதியம்.
தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது, உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டிலும் அடுத்த ஆண்டிலும் சரிவைக் காணும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியதாவது:
நிலைமைகள் சரியாகிவிடும் என்பதற்குள்ளாகவே விஷயங்கள் மோசமாகிவிடும் போல் தெரிகிறது.பிப்ரவரியில் துவங்கிய ரஷ்ய படையெடுப்பு, பன்னாட்டு நிதியத்தின் கணிப்பை பெரிதும் மாற்றிவிட்டது. போர் காரணமாக, உலகின் பல நாடுகள், அவற்றின் பொருளாதாரத்தில் பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை பன்னாட்டு நிதியம் ஏற்கனவே மூன்று முறை குறைத்துவிட்டது. இப்போது, வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 3.2 சதவீதமாகவும்; 2023ல் 2.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில், மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட நாடுகள், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டில், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் பொருளாதார மந்த நிலையை காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக் பிளஸ்’ கூட்டமைப்பு, அண்மையில் உற்பத்தியை அதிகளவில் குறைத்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளது. இது, உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பன்னாட்டு நிதியம், தன்னுடைய வளர்ச்சிக் கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement