தேசிய பேரவை உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவு

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும்  நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவு  (07) தெரிவுசெய்யப்பட்டார்.

உபகுழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ நாமல் ராஜபக்ஷவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாகர காரியவசம் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் இதனை வழிமொழிந்தார்.

இதில் கொள்கைத் தயாரிப்புத் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அரச நிர்வாகக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், சுகாதாரம் மற்றும் கல்விக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், மீன்பிடி, உணவுக் கொள்கைகளை நவீனமயப்படுத்தல், மின்சக்தி மற்றும் வலுசக்தி கொள்கைகளை நவீனமயப்படுத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை நவீனமயப்படுத்தல், தொழில்முனைவுகள் குறித்த கொள்கைகளை நவீனமயப்படுத்தல் தொடர்பில் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள குறித்த துறைசார் நிபுணர்களை உப குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய குறுகிய கால யோசனைகளை ஒரு மாத காலத்துக்குள்ளும், நடுத்தரகால யோசனைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்டகால யோசனைகளை மூன்று மாதங்களுக்குள்ளும் தேசிய பேரவையில் சமர்ப்பிக்க குழுவின் உறுப்பினர்கள் இணங்கினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பவித்திரா வன்னியாராச்சி, கௌரவ சாகர காரியவசம், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மனோ கணேசன், கௌரவ அலி சப்ரி ரஹீம், கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.