பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அவரின் தம்பியும் எம்பி.யுமான சுரேஷிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் பரிமாற்றம் செய்ததில் முறைகேடு நடந்துள்ள புகாரில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையேற்று நேற்று டெல்லி சென்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தேவைப்படும் ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் கூறினார். அதை தொடர்ந்து விசாரணை முடிந்து வெளியில் வந்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டியில், ‘இது சாதாரண விசாரணை என்றாலும் பழிவாங்கும் தோரணை தெரிகிறது. ஒன்றிய அரசின் சார்பில் எத்தனை விசாரணைக்கு சம்மன் அனுப்பினாலும் அச்சப்படாமல் அதை சந்திக்க தயாராக உள்ளேன். கர்நாடகாவில் ஒன்றுமை பாதயாத்திரையை ராகுல் மேற்கொண்டுள்ளார். எனவே, விசாரணையில் விலக்கு கோரினேன். ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் நிராகரித்தனர். சட்டத்துக்கு கட்டுப்பட்டவன் என்பதை நிரூபிக்கவே நேரில் ஆஜரானேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிகளை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வேன்,’ என தெரிவித்தார். இவரின் தம்பியும், எம்பி.யுமான டி.கே.சுரேஷிடமும் அமலாக்கத் துறை நேற்று விசாரித்தது.